சர்வதேச அளவில் போதை பொருட்களை கடத்தும் கும்பலை சேர்ந்த இலங்கை தமிழர்கள் சிலர், கேரளாவில் பதுங்கி இருப்பதாக தமிழக, 'க்யூ' பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று கேரளா, எர்ணாகுளத்தில் போலீசார் முகாமிட்டனர். தீவிரவாத செயல்கள் தடுப்பு பிரிவு போலீசார் உதவியுடன், அங்கமாலி என்ற இடத்தில் சோதனை நடத்தினர். அப்போது கிடங்கனூர் என்ற ஊரில் வாடகைக்கு வீடு எடுத்து, இலங்கை தமிழர்கள் மூன்று பேர் தங்கி இருப்பது தெரிந்தது. இவர்களில் ஒருவரை கிடங்கனூரிலும், மற்றொருவரை அத்தாணி என்ற இடத்திலும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை எர்ணாகுளம் நெடும்பாசேரியில் உள்ள தீவிரவாத செயல்கள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைத்து, தமிழக 'க்யூ' பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இவர்களில் சரவணன், 38, குமார், 35 ஆகியோர் தனியாகவும் மற்றொருவர் குடும்பத்துடனும் கேரளாவில் வசித்து வந்துள்ளனர்.
அதேபோல் ஏற்கனவே காஞ்சிபுரத்தில் தங்கியிருந்து தற்போது கோயம்புத்தூரில், பதுங்கி இருந்த இலங்கை மோதிரை பகுதியை சேர்ந்த சுரேஷ் என்கின்ற சுரேஷ்ராஜனை காஞ்சிபுரம் கியூ பிரான்ச் பிரிவினர் நேற்று கைது செய்து காஞ்சிபுரம் கொண்டு வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்தனர். குற்றவாளியை கைது செய்து 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு சுரேஷ் என்ற சுரேஷ் ராஜனை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.
சுரேஷ் என்ற சுரேஷ் ராஜன் மீது 01/2020 u/s 420, 465,468,471 353,506 (I) IPC, Sec. 14 (A) (b) of Foreigners Act, Sec. 12 (I) (C) of Passport Act 1967 and Scr. 6 of Arms Act 7 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . மேலும் ஆயுத வழக்கு போலி பாஸ்போர்ட் வழக்கு உள்ளிட்ட வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுரேஷ் எ சுரேஷ்ராஜனை செங்கல்பட்டு மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர்.
சர்வதேச போதைமருந்து கடத்தல் கும்பலில் தொடர்புடைய சுரேஷ் ராஜனை காவலில் எடுத்து விசாரிக்க தற்போது கியூ பிரான்ச் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். காவல்துறையினர் விசாரணைக்கு எடுத்து விசாரிக்கும்போது பல திடுக்கிடும் உண்மைகள் மற்றும் இவருக்கு சர்வதேச அளவில் எங்கெங்கு தொடர்பு உள்ளது என்பது குறித்த அதிர்ச்சித் தகவல் வெளியாக வாய்ப்புள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பல்வேறு உயர் ரக ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில வருடங்களாக தடை செய்யப்பட்ட, மிக ஆபத்தான போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் கூட மகாபலிபுரத்தில் டீத்தூள் பாக்கெட்டில் கடலில் மிதந்து வந்த ஹெராயின் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபோன்று சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் ஏராளமான போதை கடத்தல் சம்பவங்கள் கடல் மார்க்கமாக நடைபெற்று வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தற்போதைய கோரிக்கையாக உள்ளது