கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் அப்சா (25) இவர் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த தஸ்தகீர் (27) என்கின்ற இளைஞரை காதலித்து தனது பெற்றோர்களின் சம்பந்தத்தோடு திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் திருமணமான சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாகவும், தனது கணவர் தஸ்தகீரும் அவரது குடும்பத்தினரும் வரதட்சணை கொடுமை செய்வதாக கூறி தனது தாய் வீட்டிற்கு திரும்பி உள்ளார். இதனைத் தொடர்ந்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அப்சாவிற்கு பெண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது.


இந்நிலையில், இன்று காலை தனக்கு தூக்கம் வருவதாக கூறிவிட்டு வீட்டின் மேல் அறையில் ஓய்வெடுக்க செல்வதாக தாயிடம் கூறி சென்ற அப்சா மாலை தாயிடம் வந்து தனக்கு தூக்கம் வரவில்லை என்றும் நான் எலி பேஸ்ட் சாப்பிட்டுவிட்டேன் என்றும் கூறியுள்ளார். இதில் பதறிப்போன அவரது தாய் அக்கம் பக்கத்தினர் உதவியோடு அவரை திருக்கோவிலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அப்சா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார். அப்சாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், உயிரிழந்த அப்சா எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது.


அந்த கடிதத்தில், தனது கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்ட 7 பேர் தன்னை வரதட்சணை கொடுமை செய்வதாகவும், பெண் பிள்ளை பெற்ற காரணத்தினால் என்னை வீட்டில் சேர்க்காமல், பெண் பிள்ளையை கொல்லவும் சொல்கிறார்கள் என்றும் பெண் பிள்ளையை பெற்றெடுத்ததற்கு நான் என்ன செய்வேன் என்றும், காலம் மாறிவிட்டது என்றும்; பெண் பிள்ளையைப் பெற்ற காரணத்தினால் தன்னை அடிக்கடி தற்கொலை செய்து கொள்ள தூண்டியதாகவும் கடிதத்தில் எழுதியுள்ளார். மேலும், என் திருமண சீர் மற்றும் எனது சான்றிதழ்கள் அனைத்தையும் பெற்று என் குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நஷ்ட ஈடு இணை பெற்று என் குழந்தையின் வருங்காலத்தை பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் இந்த கடிதத்தில் அப்சா எழுதியுள்ளார்.


மேலும் இதனையே தான் வீடியோவாக பதிவு செய்துள்ளதாகவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அப்ஸாவின் தாயார் போலீசாரிடம் வரதட்சணை கொடுமை செய்ய தனது மகளை தற்கொலை தூண்டிய அவரது கணவர் உள்ளிட்ட 7 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலிசார், திருமண நடத்தி ஒரு வருடத்திற்குள் நடைபெற்ற சம்பவம் என்பதால் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.


11ஆண்டுகளுக்குப் பின் ரசிகர்களை சந்தித்த அஜித்... மும்பை டூ திருச்சி நடந்தது என்ன?