கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் தற்கொலைக்கு காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டம் கலவரமாக மாறியது. இந்த வழக்கில் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட 108 பேரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, அனைவரும் கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் தனியார் மெட்ரிக் மேநிலைப்பல்ளி மர்மமான முறையில் மாணவி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி வேண்டும் என்று கூறி நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) நூற்றுக்கணக்கான இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இது கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் தொடர்புடையவர்கள் என 128 பேரை சின்னசேலம் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இதில் 20 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சின்னசேலம் கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் கலவரத்தில் முடிந்தது. இது தொடர்பாக சின்னசேலம் காவல் துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினர். சமூக வலைதளங்கள், தொலைக்காட்சிகள் பதிவுகளின் அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்ட போலீஸார் 128 பேர் மீது 147 (சட்ட விரோதமாக கூடுதல்), 148 (ஆயுதங்களுடன் கூடுதல்), 294 (b)(ஆபாசமாக பேசுதல்), மற்றும் 323, 324, 352, 332, 336, 435, 436, 379,IPC.r/w.3,4,5. of பொதுச் சொத்தை சேதப்படுத்துதல், உள்ளிட்ட 14 பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்து கைது செய்தனர். பின்னர் அவர்களை கள்ளக்குறிச்சி 2 வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முகமது அலி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதில் 20 சிறுவர்கள் கடலூர் கூர்நோக்கு சிறார் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட 108 பேரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க பொறுப்பு நீதிபதி முகமது அலி உத்தரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அனைவரும் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மேலும் கைது செய்யப்பட்ட பள்ளியின் நிர்வாகிகள் இன்று அதிகாலை சேலம் மத்திய சிறையில் அடைத்து 15 நாள் நீதிமன்ற காவலில் விசாரிக்க உத்தரவிட்டார். அவர்களில் 4 பேர் காவல் நிலையம் பாத்ரூமில் வழுக்கி விழுந்தனர். மேலும் அவர்களில் 3 பேருக்கு கையிலும் ஒருவருக்கு காலிலும் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பதிவான வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும், எனவே இன்னும் பலர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்