கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன் ஏற்றுமதி நிறுவனத்தில் கையாடல் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் தனியார் மீன் ஏற்றுமதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடலில் இருந்து மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை கொள்முதல் செய்து அவற்றை தரம் பிரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது இவர்கள் வழக்கம். இந்நிறுவனத்தில் டேனியல் செபாஸ்டியன் என்ற இளைஞர் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் காசாளராக பணியாற்றி வந்தார்.
இதனிடையே கடந்த மே மாதம் மதன் என்ற மீனவரிடம் ரூ.27,630க்கு மீன் வாங்கியதாக 2 பில்கள் மூலம் கணக்கு காட்டியுள்ளார். அந்த தனியார் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநர் வசந்த் தற்செயலாக யார் அந்த மீனவர் மதன் என விசாரித்த போது அப்படி ஒரு ஆளே இல்லை என்றும், அவை 2 பில்களும் போலியானவை என்றும் தெரிய வந்தது. இதனையடுத்து டேனியல் செபாஸ்டியனை அழைத்து நீங்கள் போலி பில் போட்டிருப்பதை கண்டுபிடித்து விட்டோம். அந்த பணத்தை ஒப்படைக்கவில்லை என்றால் போலீசில் புகார் கொடுப்போம் என கூறியுள்ளார்.
இதனால் தான் மாட்டிக் கொண்டதாக நினைத்த டேனியல் வீட்டிலிருந்து ரூ.5 லட்சத்தை எடுத்துக் கொண்டு நிர்வாக இயக்குநர் வசந்திடம் வந்து, பணத்தை ஒப்படைத்து விட்டு தவறு செய்து விட்டதாக கதறியுள்ளார். ஆனால் ரூ.27,630 பணத்தை போலி பில் மூலம் பெற்றதற்கு எதற்காக ரூ.5 லட்சம் கொடுக்கிறார் என வசந்த் குழம்பியுள்ளார். ஒருவேளை அதிகமாக போலி பில் போடப்பட்டிருக்குமோ என சந்தேகம் எழுந்தது. உடனே டேனியலிடம் இவ்வளவு தொகை போதாது. எவ்வளவு பில் போட்டிருக்கிறாய் என்பதை கண்டுபிடித்து விட்டோம்.
இதனால் பயந்து போன டேனியல் அடுத்ததாக வீட்டிலிருந்து ரூ.30 லட்சத்தை கொண்டு வந்து கொட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வசந்த், 2015 ஆம் ஆண்டு முதல் டேனியல் எவ்வளவு பணம் கையாடல் செய்துள்ளார் என்பதை தெரிந்து கொள்ள முடிவு செய்து விசாரித்தார். அதன்படி கடந்த 7 ஆண்டுகளில் போலி பில்கள், மீன்களின் எடையை இரட்டிப்பாக குறிப்பிட்டு என சுமார் ரூ.2 கோடி 10 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்தது.
மேலும் அந்த பணத்தில் சொந்த வீடுகள், கன்னியாகுமரி, வள்ளியூரில் சொத்துக்கள், மனைவியுடன் வெளியே செல்ல விலை உயர்ந்த ஹார்ட்லி டேவிட்சன் பைக், மனைவிக்கு நகைகள், அவரது வங்கிக் கணக்கில் லட்சக்கணக்கில் வைப்புத்தொகை என செலவழித்துள்ளார். இதுகுறித்து வசந்த் அளித்த புகாரின் பேரில் குமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து டேனியலை கைது செய்து நாகர்கோவில் சிறையிலடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்