கள்ளக்குறிச்சி பகுதியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது. அமைச்சர் உதயநிதி நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண நிதியை வழங்கினார்.


கள்ளக்குறிச்சியில் தொடரும் விஷச்சாராயம் உயிரிழப்பு


கள்ளக்குறிச்சி பகுதியில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்ததில் இதுவரை 132 நபர்கள் பாதிப்படைந்துள்ளனர். தற்பொழுது 93 நபர்கள் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை விஷச்சாராயம் குடித்து 39 நபர்கள் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 46 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 17 பேரும், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 பேரும், விழுப்புரம் மருத்துவமனையில் ஒருவர் என 95 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


இதுவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 பேரும், பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மூன்று பேரும், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 08 பேரும், விழுப்புரம் மருத்துவமனையில் நான்கு பேரும் மொத்தம் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 


ஒரே நேரத்தில் நிறைய பேர் உயிரிழந்திருப்பதால் உடற்கூறாய்வு செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு இறந்தவர்களின் உடல்களை உடற்கூறு ஆய்வு செய்ய பிற மாவட்டங்களில் இருந்து மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்த பாதிப்படைந்த நபர்களுக்கு டயாலிசிஸ் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இன்று மதியம் 12 மணி வரை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


 


ஒரு நபர் விசாரணை ஆணையம்


தமிழ்நாடு அரசு இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல் தாஸ் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்குள் இந்த ஆணையும் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது. இதுபோக இது தொடர்பாக மூன்று நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர், 20க்கும் மேற்பட்ட நபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.


இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பணியிடம் மாற்றமும், காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். போக கடமையை செய்ய தவறியதாக ஒன்பது அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது


எடப்பாடி பழனிசாமி நேரில் ஆறுதல்


எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், "தமிழ்நாடு அரசு, காவல்துறையினரின் அலட்சியத்தால் உயிரிழப்புகள் நடந்துள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கள்ளச்சாராயத்துக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தும் போதிய மருந்துகளும் இல்லை. அங்கு தேவையான மருத்துவர்கள் நியமிக்கவில்லை. கள்ளச்சாராய மரணத்தை வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு என முன்னாள் மாவட்ட ஆட்சியர் பொய் கூறினர். மேலும் கள்ளச்சாராயத்தால் பெற்றோர்களை இழந்த 3 குழந்தைகளின் கல்வி செலவை அதிமுகவே ஏற்கும். மேலும் அவர்களின் குடும்பத்தினருக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். 



 பாஜக தலைவர் அண்ணாமலை


பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். "தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காமல், பல உயிர்கள் பலியாகும் வண்ணம், தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசைக் கண்டித்து, வரும் ஜூன் 22 அன்று, பாஜக சார்பாக, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பாஜக சார்பில் ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.


 அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


 அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக சென்று பாதிப்பு அடைந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களது உறவினர்களுக்கு உத்தரவாதம் அளித்த உதயநிதி, அரசு அறிவித்திருந்த 10 லட்ச ரூபாய் நிவாரண நிதியை வழங்கினார்