கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கீரியம்மன் கோயில் அருகே டாஸ்மாக் கடை ஒன்று இயங்குகிறது. தைப்பூசம் காரணமாக இந்தக் கடைக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. இதனைப் பயன்படுத்தி டாஸ்மாக் கடை பூட்டை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து மது பாட்டில்களை கொள்ளையடிக்க முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த ஒரு இருசக்கர வாகனம் மற்றும் இரண்டு செருப்புகளை பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையேஉளுந்தூர்பேட்டை உளுந்தூர் காலனியைச் சேர்ந்த ஐயப்பன் என்ற கட்டட தொழிலாளி தனது இரு சக்கர வாகனத்தை காணவில்லை என்றும் யாரோ திருடிச் சென்றுவிட்டதாகவும் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து பூட்டு உடைக்கப்பட்ட டாஸ்மாக் மதுபான கடையின் முன்பு பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனத்தின் பதிவு எண் ஐயப்பன் என்பவர் கொடுத்த புகாரில் இருந்த இரு சக்கர வாகனத்தின் பதிவு எண்ணும் ஒத்துப்போனது.
இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் மதுபான கடையின் முன்பாக கிடந்த செருப்புகளை காவல் துறையினர் ஐயப்பனிடம் காட்டியபோது அந்த செருப்புகளுக்கு உரியவர்கள் உளுந்தூர் காலனியைச் சேர்ந்த பவித்ரன் மற்றும் ஸ்ரீகாந்த் என கூறினார். அதோடு மட்டுமின்றி அவர்கள் புகைப்படங்களை ஒப்பிட்டு பார்க்கையில் அதில் இரண்டு செருப்புகளும் பவித்திரன் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோருடையதுதான் என்பது உறுதியானது.
இதனைத் தொடர்ந்து பவித்ரன் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது தீனா என்பவரோடு சேர்ந்து இவர்கள் இரண்டு பேரும் ஐயப்பன் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடியுள்ளனர். அதன் பிறகு டாஸ்மாக் மதுபான கடைக்கு சென்று தாங்கள் குடிப்பதற்கு போக மீதி இருக்கக்கூடிய மதுபாட்டில்களை விற்றுக்கொள்ளலாம் என்று முடிவு செய்து டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் உள்ள 4 பெட்டிகளை மதுபோதையில் திருடியுள்ளனர்.
ஆனால் அதை எடுத்து வரும்போது பெட்டிகளை தூக்க முடியாததால் அவைகளை அந்த இடத்திலேயே போட்டுவிட்டு சென்றுவிட்டனர். ஆனால், டாஸ்மாக் மதுபான கடையில் இருந்த 5000 ரூபாய் ரொக்கப் பணத்தையும் அவர்கள் கொள்ளை அடித்து எடுத்து சென்றனர். இதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்