கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பாஜக நகர செயலாளர் கைது செய்யப்பட்டார்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பகல் நேரங்களில் கொள்ளை சம்பவம் அரங்கேறி வந்தது. இந்த நிலையில் சிசிடிவி காட்சிகள் இருந்தும் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திருக்கோவிலூர் போலீசார் திணறி வந்தனர். பின்னர் இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் உடனடியாக கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யும் நோக்கில், திருக்கோவிலூர் துணை காவல் கண்காணிப்பாளர் பழனி காவல் ஆய்வாளர் பாபு உதவி ஆய்வாளர்கள் குற்றப்பிரிவு போலீசார் என பத்து பேர் கொண்ட தனிப்படை ஒன்றை அமைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்ற இடங்களின் அருகாமையில் இருந்த சிசிடிவி காட்சிகளை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர்.


இந்த ஆய்வில் ஸ்ப்ளெண்டர் இருசக்கர வாகனத்தில் லுங்கி அணிந்து கொண்டு மர்ம நபர் ஒருவர் அனைத்து இடங்களிலும் உள்ள சிசிடிவி காட்சிகளில் இடம்பெற்று இருக்க, அந்த நபர் குறித்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் நகர செயலாளர் அறிவழகன் என்பவர் கொள்ளை நடைபெற்ற இடங்களில் சுற்றிய, அந்த மர்ம நபர் என தெரிய வந்தது. இதனை அடுத்து தனிப்படை போலீசார் சந்தேகத்தின் பெயரில் அறிவழகனை அழைத்து திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.


இந்த விசாரணையில் அறிவழகன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், மது அருந்திவிட்டு தொடர்ந்து திருக்கோவிலூருக்கு பேருந்தில் வந்து திருக்கோவிலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏதாவது ஒரு‌‌ இடத்தில் இருசக்கர வாகனத்தை திருடி அருகாமையில் உள்ள சிறு கிராமங்களுக்கு சென்று கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்திருப்பதும், கொள்ளையடித்து விட்டு மது போதையில் திருக்கோவிலூர் பகுதியிலேயே ஏதாவது ஒரு இடத்தைத் தேர்வு செய்து அங்கு கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை புதைத்து வைத்து, பின்னர் வந்து எடுத்துச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.


மேலும் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளை திருக்கோவிலூர் பகுதியிலேயே விற்று அதன் மூலம் வரும் பணத்தை மீண்டும் மது வாங்கி அருந்துவதை வாடிக்கையாக வைத்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கடந்த (2022) ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி திருக்கோவிலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தப்பேட்டை தென்றல் நகர் பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சம்பத் குமார் என்பவரது வீட்டில் கொள்ளை அடித்ததும், அதேபோல் திருக்கோவிலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நான்கு வெவ்வேறு இடங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டு உள்ளார். 


இதனை அடுத்து கொள்ளையடிக்க பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் கொள்ளையடித்து வைத்திருந்த 3.3/4 சவரன் தங்க நகைகள் என இரண்டரை லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நெல்லிக்குப்பம் பாரதிராஜா கட்சியின் நகரச் செயலாளர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது அக்கட்சியின் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.