பேட்டரிகளை திருடிய வழக்கு

 

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்துள்ள கன்னடபாளையம், குப்பைமேடு பகுதியை சேர்ந்தவர் பிரியா. இவருடைய கணவர் பழனி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இவருக்கு 3 பெண் பிள்ளையும் மூன்று ஆண் பிள்ளைகளும் உள்ளனர். மூத்த மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு அரசினர் சிறப்பு இல்லத்தில் (சீர்திருத்தப்பள்ளி) பள்ளியில் 6 மாதம் கைதியாக இருந்து வந்துள்ளார் . 17 வயது சிறுவன் கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.



 

இந்த நிலையில் தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படையினர் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரயில்வே தண்டவாளம் அருகே இருக்கும் பேட்டரிகளை திருடிய வழக்கு சம்பந்தமாக கடந்த இருபத்தி ஒன்பதாம் தேதி ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து . ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் டிசம்பர் 30 தேதி மாலை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி விட்டு செங்கல்பட்டு சிறப்பு இல்லத்தில் பிரியாவின் மூத்த மகனை அடைத்துள்ளனர்.

 

மகன் சாவில் மர்மம்

 

இதனை அடுத்து டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் பிரியாவிற்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட  காவலர்கள் 'உன்னுடைய மகனுக்கு உடல்நிலை சரியில்லை ' என தெரிவித்துள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் தொலைபேசி, வாயிலாக தகவல் தெரிவித்த காவலர்கள் மிக மோசமான நிலையில் மகன் இருப்பதாகும் தெரிவித்துள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட போலீசார் மகன் உயிரிழந்ததாக தாயிடம் தெரிவித்துள்ளனர். தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக தாய் தொடர்ந்து குற்றச்சாட்டை தெரிவித்து வந்தார்.



 

இடுகாட்டில் தகனம் 

 

இந்த நிலையில் நேற்று நீதிபதி ரீனா முன்னிலையில் மருத்துவர் குழுவினர், உயிரிழந்த 17 வயது சிறுவன் கோகுல்ஸ்ரீ உடலை உடற்கூறு செய்தனர். உடற்கூறாய் செய்யும் பொழுது முழுவதையும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து தற்பொழுது நீதிபதி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீதிபதி கொடுக்கும் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து உடலை பெற்றுக் கொண்ட தாய் பிரியா, செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட பழவேலி இடுகாட்டில் தகனம் செய்தார்.



 

தண்டிக்க வேண்டும் 

 

முன்னதாக  உயிரிழந்த மகனின் உடலை தாய் பிரியா பார்த்து உள்ளார். மேலும் தனது மகனின் உடலில் அனைத்து இடங்களிலும் காயம் இருப்பதாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்த பொழுது கூறுகையில்,தனது மகனின் உடல் முழுவதும் காயங்கள் உள்ளன. கண்ணம், உதடு, தாடை, இரண்டு கைகள் மற்றும் முதுகு,  பின்புறம் ஆகிய பகுதிகளில் பிரம்பால் அடித்தது போல் காயம் உள்ளதாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் . தனது மகனின் உயிரிழப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டும் , எனக்கு பணம் உள்ளிட்டவை எதுவும் தேவையில்லை. மேலும் இரண்டு நாளாக என் மகனின் உடலை கூட பார்க்க முடியாமல், என்னை மிரட்டி வந்தவர்களையும், தண்டிக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.