பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 மணி நேரத்தில் நீதி பெற்று தந்ததோடு, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து உதவித் தொகைகையும் பெற்று தந்துள்ள மதுரை மண்டல காவல்துறைக்கு சமூக ஆர்வலர்கள் தங்களது பாராட்டை தெரிவித்துள்ளனர்.




தேனி மாவட்டம் சின்னமனூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஜூலை 2ஆம் தேதி சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதோடு கொடூரமான முறையில் தீ வைத்தும் கொளுத்தப்பட்டிருக்கிறார். பள்ளிக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த தனது பேத்திக்கு நடந்த கொடுமையை தாங்க முடியாத அவரது பாட்டி சின்னமனூர் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளிக்கிறார். அதன்படி அன்றைய தினமே வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளியான விஜயகுமார் என்பவர் போலீசாரால் கைது செய்யப்படுகிறார்.



வழக்கில் கைதானவர்


75% தீக்காயங்களுடன் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுமிக்கு இடைக்கால நிவாரணம் பெற்று தர காவல்துறை தரப்பிலேயே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, சிறுமியின் பாட்டியின் பெயரில் மனு எழுதி அதனை சின்னமனூர் காவல்துறையினரே நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். அதன்படி, இந்த வழக்கை விசாரித்த தேனி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 3 லட்ச ரூபாயை வழங்க வேண்டும் என்றும் அதில் ஒரு லட்சம் ரூபாயை சிறுமியின் சிகிச்சை உதவிக்காக தமிழ்நாடு அரசு உடனடியாக விடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டு, அந்த தொகையை சிறுமியின் பாட்டி வங்கிக் கணக்கில் செலுத்த ஆணையிட்டுள்ளது.


மதுரை மண்டல ஐ.ஜி. அஸ்ராக் கார்க் உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட சிறுமி வழக்கில் 10 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டு, அவருக்கு உதவித் தொகையும் கிடைத்துள்ளதை குழந்தைகள் நல ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு இழப்பீடு பெறும் வரை உதவியாக நின்ற மதுரை மண்டல காவல்துறையினரை அவர்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.



மதுரை மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் IPS


தமிழ்நாட்டில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 10 மணி நேரத்தில் குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டு, இழப்பீடும் பெற்று கொடுத்தது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.


மதுரை மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் இதுபோன்ற ஏதேனும் விரும்பதகாத சம்பவங்கள் ஒருவேளை நடைபெற்றுவிட்டால், அவர்களது குடும்பத்திற்கு காவல்துறையினர் உறுதுணையாக நின்று உதவிட வேண்டும் என்றும் தனது மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மாவட்ட காவல் நிலையங்களுக்கும் ஐ.ஜி. அஸ்ராக் கார்க் உத்தரவிட்டுள்ளார்.