ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மூன்றாவது தளத்தில் நேற்று (31/01/2023) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 14 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, பேங்க் மோர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆஷிர்வாட் டவர் அடுக்குமாடி குடியிருப்பில் மாலை 6 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது, கிட்டத்தட்ட 40 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. தீயணைப்பு வீரர்களின் கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்கு அதிமான போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
மூன்றாவது மாடியில் தீப்பிடித்ததாக தன்பாத் மாவட்ட நிர்வாகம் செய்திக்குறிப்பைப் பகிர்ந்துள்ளது. அதில், “14 பேர் இறந்துவிட்டனர். காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தன்பாத் துணை கமிஷனர் சந்தீப் சிங் கூறியதாவது: அதில் 10 பேர் பெண்கள், மூன்று குழந்தைகள், ஒரு ஆண் என இதுவரை மொத்தம் 14 இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. மீட்பு பணியை முடித்து, பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். கட்டிடத்தின் தீயினால் பாதிக்கப்பட்ட பகுதி சுத்தம் செய்யப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டனர்” என்றார்.
தன்பாத் தீயணைப்பு அதிகாரி லக்ஷ்மண் பிரசாத் கூறியதாவது: அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாவலருடன் நான் நடத்திய உரையாடலின் அடிப்படையிலான முதற்கட்ட தகவலின்படி, எண்ணெய் விளக்கு தான் தீ விபத்துக்கு காரணம். இருப்பினும், அவர் கூறியதை சரிபார்க்க நாங்கள் இன்னும் விசாரணை நடத்தி வருகிறோம் எனவும் கூறியுள்ளார். ”சிலர் உடல் கருகி இறந்தனர், பலர் மூச்சுத் திணறி இறந்தனர் என்று பிரசாத் கூறினார்.
நான்கு நாட்களுக்கு முன், மாவட்டத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், டாக்டர் தம்பதி உட்பட 5 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் இரங்கல்
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், “தன்பாத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. எனது எண்ணங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்” என்றார். உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000ம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.