திருவாரூர் அருகே மென் பொறியாளர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை. குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது கொள்ளையர்கள் கைவரிசை.
திருவாரூர் மாவட்டம் குவளைக்கால் பகுதியில் திருவாரூர் - மயிலாடுதுறை முக்கிய சாலையில் பாலமுருகன் என்பவர் தனது சொந்த வீட்டில் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். கொரோனா தொற்று காரணத்தினால் வீட்டில் இருந்து கடந்த சில மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கிருத்திகா என்ற மனைவியும் ஹர்ஷிதா என்ற 3 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு ஊட்டி அருகே உள்ள கிராமத்திற்குச் சென்று விட்டு ஊட்டிக்குச் சென்று சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்காக நேற்று இரவு குடும்பத்துடன் பாலமுருகன் புறப்பட்டு சென்றார். இதனை அறிந்த கொள்ளையர்கள் பாலமுருகனின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருந்த பீரோவை உடைத்து பொருட்களை திருடிச் சென்றனர். பாலமுருகன் வீட்டில் இல்லாத காரணத்தால் அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது அறிந்து காவல்துறையினருக்கும் பாலமுருகனுக்கும் தகவல் அளித்தனர். இதனையடுத்து வந்த நன்னிலம் காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோ தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர் குழுக்களுக்காக காத்திருந்தனர்.
அதன் பின்னர் பாலமுருகனிடம் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு காவல்துறையினர் கேட்டபோது, வீட்டில் 50 சவரன் தங்க நகையும் இரண்டு லட்ச ரூபாய் ரொக்கப் பணமும் பீரோவில் வைத்திருந்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து காவல் துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் பாலமுருகன் ஊட்டியில் இருந்து கிளம்பி தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த 50 சவரன் தங்க நகை மற்றும் 2 லட்ச ரூபாய் ரொக்கப் பணம் திருடு போயுள்ளது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக கைரேகை நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் வீட்டின் உரிமையாளர் வீட்டில் இல்லாத காரணத்தால் காணாமல்போன பொருட்கள் தொடர்பாக நீண்ட நேரம் காத்திருந்து விசாரணையை காவல்துறையினர் தொடங்கினர். திருவாரூர் - மயிலாடுதுறை முக்கிய சாலையில் உள்ள வீட்டில் நடைபெற்றுள்ள இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து இரவு நேரங்களில் கொள்ளை சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் அதிக அளவில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் காவல்துறையினர் இரவு நேர ரோந்து பணிகளை கிராம பகுதிகளில் அதிக படுத்த வேண்டும் என கிராம புற மக்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்