கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நகை வியாபாரம் செய்யலாம் என அழைத்துச் சென்று கல்லூரி மாணவரை தாக்கி நகை பறித்த வழக்கில் பாஜக பிரமுகர் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

Continues below advertisement

ஆசை வார்த்தை கூறி ஏமாற்றம்

ஊஞ்சவேலம் பெட்டியைச் சேர்ந்த அபினேஷ் என்பவர் தனியார் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு பொறியியல் பயின்று வருகிறார்.  இவருக்கும் போடி நாயக்கன் பாளையத்தை சேர்ந்த சர்வேஷ், தேனியை சேர்ந்த கரண்ராஜ், ஓட்டன் சத்திரம் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில், அனைவரும்  சேர்ந்து பகுதி நேரமாக நகை வியாபாரம் செய்யலாம் என அபினேஷிடம் கூறி உள்ளனர். மேலும், தங்களுக்கு தெரிந்த நபர் ஒருவர் பாதி விலைக்கு தங்கத்தை கொடுப்பதாகவும் , அதனை கூடுதல் விலைக்கு விற்று பணம் சம்பாதிக்கலாம் எனவும் ஆசை வார்த்தை கூறி எட்டிமடை பகுதிக்கு அபினேஷை வரவழைத்துள்ளனர்.

Continues below advertisement

இதனை நம்பிய அவரும் எட்டிமடை பகுதிக்கு சென்ற நிலையில், காரில் அபினேஷை ஏற்றி கொண்டு சர்வேஷ், கரண்ராஜ், பாலாஜி உட்பட ஐந்து பேர் சென்றுள்ளனர்.  மாவுத்தம்பதி அருகே காட்டு பகுதிக்குள் அபினேஷை கடத்தி சொன்ற கும்பல் அவரை சரமாரியாக தாக்கியதோடு, 2 சவரன் ஜெயின், செல்போன் ஆகியவற்றை பறித்து  கொண்டு தப்பி சென்றனர். காயமடைந்த அபினேஷ், அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார்,  தேனியில் பதுங்கியிருநத சர்வேஷை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின் பேரில் கோவை ஆர்.எஸ். புரத்தை சேர்ந்த கார் வியாபாரியும், பாஜக பிரமுகருமான விவேக் என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில்,  சர்வேஷ், விவேக் உட்பட ஆறு பேரும் சேர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, விவேக் உட்பட 2 பேரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.