சசிகுமார் எப்படிப்பட்ட படம் நடித்தாலும் எனக்கு மிகவும் பிடிக்கும் என மை லார்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாலா தெரிவித்துள்ளார் 

Continues below advertisement

குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி, ஜப்பான் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ராஜூ முருகனின் அடுத்த படைப்பாக “மை லார்ட்” படம் வெளியாகவுள்ளது. சசிகுமார் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் சைத்ரா ஜே.ஆச்சார் ஹீரோயினாக நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தில் ஆஷா சரத், குரு சோமசுந்தரம், ஜெயப்பிரகாஷ், கோபி நயினார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மை லார்ட் படம் பிப்ரவரி 13ம் தேதி தியேட்டரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மை லார்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் இயக்குநர் பாலா, ஏ. வெங்கடேஷ், மாரி செல்வராஜ், விஜய் மில்டன், பிரேம் குமார், ரவிக்குமார், த.செ.ஞானவேல், லிங்குசாமி என பலரும் கலந்து கொண்டனர். 

Continues below advertisement

மை லார்ட் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் பாலா, ”இயக்குநர் ராஜூ முருகன் இயக்கிய முதல் படமாக குக்கூ படத்துக்கு நானும், லிங்குசாமியும் சென்றோம். வழக்கமாக பூஜை காலையில் நடைபெறும் நிலையில் அது மதிய வேளையில் நடந்தது. இரண்டாவது படம் ஜோக்கர், இப்போது மை லார்ட் என டைட்டில் வைக்கிறார். பொறுப்புணர்ச்சி இருந்தாலும் இவ்வளவு நக்கலா டைட்டில் வைக்க அது ராஜூமுருகனால் மட்டுமே முடியும்.

சசிகுமார் படத்தில் இடம்பெற்ற ராசாதி ராஜா பாட்டில் பிரமாதமாக டான்ஸ் ஆடியிருக்கான். இப்படி ஒரு டான்ஸை நான் எங்கேயும் பார்த்தது இல்லை. அந்த பாட்டிற்கு நடன இயக்குநர் கிடையாது என நான் நினைக்கிறேன். நல்லவேளை மைக்கேல் ஜாக்சன் இறந்து போய்விட்டார். இந்த கேரக்டர் இப்படித்தான் ஆட வேண்டும் என நினைத்து ஆடியிருப்பார் என நினைக்கிறேன். 

என்னதான் நமக்கு பிடித்தவர்கள் எப்படி படம் எடுத்தாலும் நமக்கு பிடிக்கும் என்பது போல, சசிகுமார் ஒரு சிஷ்யன், தம்பி என்ற முறையில் என்ன செய்தாலும் பிடிக்கும். அதுதான் அவன் மேல் நான் வைத்திருக்கும் பாசம். 

படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள சைத்ராவுடன், அடுத்து எந்த நடிக்க தெரிந்த ஹீரோவாவது நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் இந்த பெண்ணிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவ்வளவு பிரமாதமாக நடித்துள்ளார். சைத்ரா நடித்துள்ள ஒரு கன்னட படத்தில் ஒரு சின்ன சீன் பார்த்தேன். 4 நிமிடம் ஓடும் காட்சியில் மிக ஆக்ரோஷமாக நடித்திருந்தார். அவரின் நடிப்பு உற்று கவனிக்க வேண்டிய அளவுக்கு இருந்தது. சைத்ரா மிகப்பெரிய அளவுக்கு வளர வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம்” என இயக்குநர் பாலா தெரிவித்துள்ளார்.