விழுப்புரத்தில் நகை செய்ய கொடுத்த ரூ.1 கோடி மதிப்புள்ள 2 கிலோ எடையுள்ள தங்கக்கட்டிகளுடன் தலைமறைவான நகை தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
தங்க நகை வியாபாரம்:
விழுப்புரம் வண்டிமேடு பகுதியை சேர்ந்தவர்கள் குமரன் மற்றும் சண்முகம், குபேரத்தெருவை சேர்ந்தவர் தீபக். இவர்கள் 3 பேரும் நகை தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் விழுப்புரம் நாப்பாளைய தெருவை சேர்ந்த ராமசாமி மகன் சக்திவேல் (39) என்பவரிடம் அவ்வப்போது தங்க கம்மல், ஜிமிக்கி, மூக்குத்தி, மோதிரம், நாணல் உள்ளிட்ட பொருட்களை செய்வதற்காக தங்கக்கட்டிகளை கொடுத்து நகைகளை செய்து பெற்று வந்தனர். சக்திவேலுவும், அவர்கள் 3 பேரும் கூறியபடி உரிய நேரத்தில் நகைகளை செய்து கொடுத்து வந்துள்ளார்.
இந்த நம்பிக்கையின் அடிப்படையில் கடந்த மே மாதம் 19-ந்தேதியன்று தீபக், மேற்கண்ட நகை உருப்படிகளை செய்வதற்காக சக்திவேலிடம் 450 கிராம் எடையுள்ள சுத்த தங்க கட்டியை கொடுத்துள்ளார். அதேபோல் குமரன், 200 கிராம் எடையுள்ள தங்கமும், ரூ.70 ஆயிரம் பணமும், சண்முகம் 1,600 கிராம் எடையுள்ள தங்கக்கட்டியையும் கொடுத்துள்ளனர். அதனைப்பெற்ற சக்திவேல், ஓரிரு மாதங்களில், நீங்கள் கேட்ட நகை உருப்படிகளை செய்து தருவதாக கூறியுள்ளார்.
தங்கக்கட்டியுடன் தலைமறைவு
மேலும் விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் நகை பட்டறை நடத்தி வரும் சக்திவேலின் கடைக்கு தீபக் உள்ளிட்ட 3 பேரும் அவ்வப்போது சென்று நகை வியாபாரம் விஷயமாக பேசி வந்துள்ளனர். இந்த சூழலில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தீபக் உள்ளிட்ட 3 பேரும் சக்திவேல் பட்டறைக்கு சென்றபோது அவரது பட்டறை பூட்டிக்கிடந்தது. அவரை பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டபோதிலும் அவர் செல்போன் அழைப்பை எடுக்கவில்லை. உடனே அவரது வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரிடம் விசாரித்தபோது சக்திவேல், வீட்டுக்கு வரவில்லை என்றும் எங்கு சென்றார் என தங்களுக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளனர். மோசடி செய்யப்பட்ட தங்கக்கட்டிகளின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதனால், சக்திவேல் நகைகளையும் செய்து தராமல், வாங்கிய தங்கக்கட்டியையும் திருப்பித்தராமல் ஏமாற்றி மோசடி செய்து விட்டாரே என்று எண்ணி மனவேதனை அடைந்த அவர்கள் 3 பேரும் இதுபற்றி விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் சக்திவேல் மீது நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சக்திவேலை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங்சாய் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்பேரில் தனிப்படை போலீசார், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தியதோடு பல்வேறு இடங்களில் சக்திவேலை வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் அவர் சென்னையில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று சக்திவேலை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரை விழுப்புரம் அழைத்து வந்து கைது செய்து அவரிடமிருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்கத்தை (75 பவுன்) பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.