கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த மணச்சனப்பட்டியை சேர்ந்தவர் கலாராணி. இவரது மகள் இப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் கடந்த 2018ம் ஆண்டு 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார். தொடர்ந்து 9ம் வகுப்பு படிக்க சிறுமியை அவரின் அத்தை வீடு அமைந்துள்ள புரசம்பட்டிக்கு அனுப்பி வைத்தனர் பெற்றோர். அங்கிருந்து திருச்சி மேலப்புதூரிலுள்ள பள்ளியில் 9ம் வகுப்பு சேர்ந்து படித்து வந்துள்ளார்.


 




சிறுமியின் அத்தை மகனும், ஜேசிபி ஆபரேட்டருமான சேகர், 15.01.2018 அன்று சிறுமியின் பிறந்த நாளை முன்னிட்டு பரிசுப் பொருட்கள் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, திருச்சி அழைத்துச் சென்று பரிசுப் பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார். பிறகு புரசம்பட்டிக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 


 




பின்னர், சேகர் வேலைக்காக மலேசியா செல்ல இருப்பதாக சிறுமியிடம் கூறியுள்ளார். ஆனால், சிறுமி அங்கு வேலைக்கு சென்று வேறு யாரையாவது திருமணம் செய்து கொண்டால் நான் என்ன செய்வது என கேட்டதற்காக, கடந்த 02.04.2018 அன்று காலை 11 மணியளவில் சின்னப்பனையூரில் உள்ள விநாயகர் கோவிலுக்கு கடத்திச் சென்று 13 வயதே நிரம்பிய சிறுமியை குழந்தை திருமணம் செய்துள்ளார்.


 




 


அதன் பிறகு, சிறுமியிடம்  திருமண வயது வந்தவுடன் வீட்டில் சொல்லிக் கொள்ளலாம் எனக் கூறி கட்டிய தாலியை கழட்டி வாங்கி வைத்துக் கொண்டார். மலேசியா சென்று விட்டு கடந்த 2020 அன்று ஊர் திரும்பிய சேகர், சிறுமியிடம் நான் தான் உன்னை திருமணம் செய்து கொண்டேனே எனக் கூறி கட்டாயபடுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்பு, ஈரோட்டிற்கு வேலைக்காக செல்வதாக கூறி சிறுமியை  கடந்த 10.11.2021 அன்று அவரது அம்மா வீட்டில் விட்டு விட்டு சென்று உள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 11.11.2021 அன்று சேகர், மீலா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். 




இந்த தகவல் சிறுமிக்கு 17.11.2021 தெரிய வந்துள்ளதை அடுத்து, சேகர் திருமணம் செய்து கொண்டது, பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக தன் தாயிடம் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து சிறுமியின் தாய் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, சேகர் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.


 




இதுதொடர்பான வழக்கு மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனை விசாரித்த நீதிபதி நசீமா பானு, போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், கடத்திக் கொண்டு போய் விருப்பத்திற்கு மாறாக நடந்து கொண்ட குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், குழந்தை திருமணம் செய்து கொண்டதற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் வழங்கி ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். 


மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 லட்சம் நிவாரண நிதி அரசு வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளார். இதனை தொடர்ந்து  சேகரை சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண