பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீண்டும் செய்திகளில் இடம்பெற்றுள்ளார். அவரும் மோசடி வழக்கில் தற்போது சமீபத்தில் கைதான சுகேஷ் சந்திரசேகரும் எடுத்துக் கொண்ட படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஜாக்குலினின் மூக்கில் சுகேஷ் முத்தமிடுவது போல இந்த இருக்கும் படம் ஏற்கனவே வைரலான படத்தைப் போலவே பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார் ஜாக்குலின். 


200 கோடி ரூபாய் பணத்தை மிரட்டிப் பெற்றதாக சுகேஷ் சந்திரசேகர் மீதான வழக்கு விசாரணையில் சமீபத்தில் அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்டார் ஜாக்குலின் பெர்னாண்டஸ். சுகேஷ் அவருக்கு ஹாலிவுட் திரைப்படத்தில் நடிகை வாய்ப்பு பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளிந்திருந்ததாகக் கூறப்படுகிறது. நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுடன் உறவில் இருப்பதாக சுகேஷ் கூறிய பல மாதங்களுக்குப் பிறகு இந்தப் புகைப்படம் வைரலாகியது குறிப்பிடத்தக்கது. 



Gucci, Hermes, Louis Vuitton ஆகிய விலை உயர்ந்த பிராண்ட்களின் பல்வேறு சொகுசுப் பொருள்களை நடிகை ஜாக்குலினுக்கு சுகேஷ் பரிசளித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சுகேஷ் ஜாக்குலிக்கு மினி கூப்பர் கார் ஒன்றையும் வாங்கி பரிசாகத் தந்துள்ளார். மேலும் ஜாக்குலினுக்கு ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு பெற்றுத் தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார். ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம் ஒன்றிடம் இருந்து ஜாக்குலினுக்குக் கடிதம் கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 


சுகேஷ் சந்திரசேகர் பல்வேறு நடிகைகளுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பல்வேறு பாலிவுட் நடிகைகளுக்கு பரிசுப் பொருள்களை வெவ்வேறு பெயர்களில் அனுப்பியுள்ளார் சுகேஷ் சந்திரசேகர். பாலிவுட் நடிகைகள் மீதான தன் அன்பைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்துள்ளார் சுகேஷ். எனினும், ஜாக்குலினைத் தவிர வேறு யாரும் சுகேஷ் விரித்த வலையில் விழவில்லை எனக் கூறப்படுகிறது. 



இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மௌனம் கலைத்துள்ளார் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் `இந்த நாடும் அதன் மக்களும் எனக்கு அதீத அன்பும் மரியாதையும் வழங்கியுள்ளனர்.  ஊடகங்களில் இருக்கும் எனது நண்பர்கள் பலரும் இவ்வாறே என் மீது அன்பைப் பொழிந்துள்ளனர். அவர்களிடம் இருந்து நான் பலவற்றைக் கற்றுக் கொண்டேன். நான் தற்போது மோசமான காலகட்டத்தை அனுபவித்து வருகிறேன்; என் நண்பர்களும், ரசிகர்களும் நான் இதனைக் கடப்பதை விரைவில் காண்பார்கள் என நம்புகிறேன். இந்த நம்பிக்கையில் தான் என் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடும் படங்களைப் பகிர வேண்டாம் என நான் அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்கிறேன். உங்களுக்குப் பிடித்தவர்களிடம் நீங்கள் இவ்வாறு செய்ய மாட்டீர்கள்; அது எனக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். நீதியும், நல்ல பண்பும் தழைக்கட்டும். நன்றி’ என அவர் குறிப்பிட்டுள்ளார். 






கடந்த ஆண்டு, 200 கோடி ரூபாய் பணத்தை மிரட்டிப் பெற்றதாகக் கூறி கைது செய்யப்பட்டார் சுகேஷ் சந்திரசேகர்.