மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் பகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏவின் 17 வயது மகன் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிர் இழந்துள்ளார். இந்த நிகழ்வு கடந்த நவம்பர் 11 அன்று ஜபல்பூரில் உள்ள அவரது இல்லத்தில் நிகழ்ந்துள்ளது. 


வைபவ் யாதவ் என்ற 17 வயது சிறுவன் தன் வீட்டில் மாலை சுமார் 4.30 மணிக்கு இருந்த உரிமம் பெற்ற ரிவால்வர் பயன்படுத்தித் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்துள்ளார். 12ஆம் வகுப்பு பயின்று வந்த இந்தச் சிறுவனின் தந்தை மத்தியப் பிரதேசத்தின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். சஞ்சய் யாதவ் என்ற அவர், பர்கி தொகுதியின் எம்.எல்.ஏ ஆவார். 


சம்பவம் நிகழ்ந்தவுடன், வைபவ் யாதவ் தன் தலையில் துப்பாக்கிச் சூடு காயத்தோடு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் சில நிமிடங்களுக்குப் பிறகு, வைபவ் யாதவ் உயிரிழந்ததாக அறிவித்தனர். சஞ்சய் யாதவ் குடும்பத்தினர் வைபவ் யாதவ் கழிவறையில் தன்னைத் தானே சுட்டுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளனர்.



வைபவ் யாதவ்


 


ஜபல்பூர் காவல்துறை ஆணையாளர் சித்தார்தா பகுணா செய்தியாளர்களிடம் இந்த வழக்கு தற்கொலை வழக்கு எனவும், தற்கொலை வழக்காகவே பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 


மேலும், காவல்துறை தரப்பில் நான்கு பக்கங்கள் எழுதப்பட்ட தற்கொலைக் குறிப்பு கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தில் உயிரிழந்த சிறுவன் தன் தந்தையும், தாயும் நல்லவர்கள் எனவும், தனது முடிவுக்குத் தானே காரணம் எனவும், வேறு யாரும் பொறுப்பேற்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 



காவல்துறை தரப்பில், உயிரிழந்த வைபவ் யாதவ் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருடைய மன நலம் குறித்த கண்ணோட்டத்திலான விசாரணை நடந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 






 


இந்த நிகழ்வு குறித்து செய்திகள் வெளியாகியவுடன், சஞ்சய் யாதவ் வீட்டின் முன் பெரியளவில் மக்கள் கூட்டம் கூடியுள்ளது. மேலும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் எம்.எல்.ஏ சஞ்சய் யாதவின் இல்லத்திற்கு வருகை தந்து அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கமல் நாத் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தச் சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார்.