சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை மூங்கப்பாடி தெருவை சேர்ந்தவர் பத்மாவதி. இவர் கடந்த மாதம் 10 ஆம் தேதி வீட்டுக்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் பத்மாவதியின் கழுத்தில் இருந்து நான்கு பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினர். இதுபற்றிய புகாரின் பேரில் சேலம் செவ்வாய்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 



சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கொள்ளையர்களை பிடிக்க மாநகர காவல் கண்காணிப்பாளர் நஜ்முல் கோடா தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். இதன்படி துணை காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் மேற்பார்வையில் உதவி காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையில் பத்து பேர் அடங்கிய தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.


அதில், சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் இது என்ன பொருட்கள் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் சொகுசு காரில் சேலம் வரை வந்து அதனை ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு அங்கிருந்து இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு கொள்ளை அடிக்கச் செல்லும் கர்நாடகா மாநிலத்தில் தங்கியிருக்கும் ஈரான் கொள்ளையர்கள் என்பதை கண்டறிந்தனர்.


இதையடுத்து இவர்கள் கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டம் இராணி ஹல்லி பகுதியில் தங்கியிருப்பதாக வந்த ரகசிய தகவல்களின் படி சேலம் தனிப்படை காவல்துறையினர் கர்நாடகா விரைந்தனர். இங்கு கிடைத்த சிசிடிவி காட்சிகளை கொண்டு கர்நாடகா மாநில காவல்துறையினர் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பத்ரோதின் காலனி என்ற இடத்தில் இரண்டு தலைமுறைக்கு முன்பு ஈரானிலிருந்து அகதிகளாக இந்தியாவிற்கு வந்தவர்கள் குடும்பம், குடும்பமாக கர்நாடகாவில் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் திருட்டில் ஈடுபட்டு வருவதை தொழிலாக கொண்டிருப்பது தெரியவந்தது. 



இதையடுத்து 10 நாட்களுக்கும் மேலாக அங்கு தங்கியிருந்து கொள்ளையர்களை படிப்பதற்கு திட்டமிட்டு வந்தனர். சரியான நேரத்தில் கிராமத்தில் தொலைந்த காவலர்கள் ஆசிக் அலி என்பவரின் மகன் முகமது ஆசிப் அலி (23) மற்றும் அப்துல் ஜாப்பார் மகன் ஷபி (30) ஆகிய இருவரை சேலம் காவல்துறையினர், கர்நாடக காவல்துறையினர் உதவியோடு கைது செய்தனர். சேலம் அழைத்துவரப்பட்ட இருவரிடம் இருந்து சொகுசு கார், இருசக்கர வாகனம் மற்றும் 6 பவுன் நகையை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக சேலத்தில் பல்வேறு இடங்களில் திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இது மட்டுமின்றி தர்மபுரி கிருஷ்ணகிரி உட்பட பல்வேறு இடங்களில் வலிமை பட பாணியில் தனியாக நடந்து வரும் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.


மேலும் விசாரணையில் இவர்கள் ஐந்து பேர் கொண்ட திருட்டு கும்பல் என்றும், இருவர் மட்டுமே பிடிபட்ட நிலையில் மீதமுள்ள மூன்று பேர் தப்பிச் சென்றது தெரியவந்தது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திருடப்படும் நகைகளை மகாராஷ்டிரா மாநிலத்திற்கு எடுத்துச்சென்று விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. தப்பிச் சென்ற மூன்று பேரை கண்டுபிடிக்க தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.