தூத்துக்குடி அருகே உள்ள தாளமுத்துநகர் முத்தரையர் கடற்கரை பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டுக்காரர் ஒருவர் சந்தேகப்படும் படியாக சுற்றி வருவதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கியூ பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு சுற்றிக் கொண்டு இருந்தவரை மடக்கி பிடித்து கியூ பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர் இங்கிலாந்து பாஸ்போர்ட் மற்றும் இந்திய, இலங்கை பணமும் வைத்து இருந்தாராம்.
விசாரணையில், பிடிபட்டவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜோனாதன் தோர்ன்(வயது 47) என்பது தெரியவந்தது. இவர் இந்தியா வாழ் வெளிநாட்டினருக்கான, ஓ.சி.ஐ. என்ற அட்டை வைத்து இருந்தார். இவர் கோவாவில் இருந்து விமானம் மூலம் பெங்களுருக்கு வந்து உள்ளார். அங்கு இருந்து வாடகைக்கு கார் எடுத்துக் கொண்டு கடந்த 9-ந் தேதி தூத்துக்குடிக்கு வந்து உள்ளார். தூத்துக்குடியில் உள்ள பிரபல ஓட்டலில் தங்கி இருந்தாராம். பின்னர் தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் உரிய அனுமதியின்றி இலங்கைக்கு செல்ல திட்டமிட்டு இருந்தாராம். இதற்காக கடற்கரையில் நின்றபோது பிடிபட்டு உள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் மும்பை மற்றும் கோவா பகுதிகளில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 226 கிலோ கேட்டமைன் போதை பொருளை பறிமுதல் செய்து உள்ளனர். இந்த வழக்கில் ஜோனாதன் தோர்ன் கைது செய்யப்பட்ட உள்ளார். 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை ஜெயிலில் இருந்து உள்ளார். பின்னர் பரோலில் வெளியில் வந்து உள்ளார். இவர் இதுவரை 60 நாடுகளுக்கு சென்று இருப்பது தெரியவந்து உள்ளது.
இதைத் தொடர்ந்து கியூபிரிவு போலீசார் ஜோனாதன் தோர்ன் மீது பாஸ்போர்ட் முறைகேடு வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி எம்.ராஜகுமரேசன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். சிங்கம் 2 படத்தில் சர்வதேச கடத்தில் மன்னனாக டேனி என்கிற கதாபாத்திரம் வரும். உலக நாடுகளில் எல்லாம் தன் கடத்தல் சாம்பிராஜ்யத்தை நிருவிய டேனி, அசால்டாக நினைத்து தமிழக எல்லையில் தரையிறங்குவார். அவர் அசால்டாக நினைக்கும் தமிழக காவல்துறை, அவரை அரெஸ்ட் செய்யும். பின்னர் அவர் தப்பிப்பதும், சிங்கம் சூர்யா அவரை நாடு விட்டு நாடு தாண்டி பிடிப்பதும் வேறு கதை. தற்போது கைதாகியுள்ள ஜோனாதனும் டேனி போன்று தான். சர்வதேச குற்றங்களில் ஈடுபட்டவர். பல குற்றங்களில் தப்பித்தவர். ஆனால் இந்திய போலீசாரிடம் அடுத்தடுத்து சிக்கி சிறை வாசம் கண்டு வருகிறார்.