அமெரிக்காவில் அடைக்கலம் கேட்டு வந்த நபர் இந்தியாவைச் சேர்ந்தவரை அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள லித்தோனியா நகரில் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பகுதிநேர ஊழியராக விவேக் சைனி என்ற 25 வயது இளைஞர் பணியாற்றி வந்தார். இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின் பர்வாலா நகரைச் சேர்ந்த இவர் சண்டிகார் பல்கலைக்கழகத்தில் பி.டெக் படித்து முடித்த மேற்படிப்புக்காக 2 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா சென்றுள்ளார்.
இதனிடையே இவர் பணியாற்றிய வணிக வளாக கடைக்கு ஜூலியன் பால்க்னர் என்ற நபர் வந்துள்ளார். பொதுவாக அந்த நாட்டில் வீடின்றி திரிபவர்களில் இவர் ஒருவர். எனவே அந்த வணிக வளாகத்தில் அடைக்கலம் கேட்டு 2 நாட்கள் தங்குவதற்கு கோரிக்கை விடுத்துள்ளார். அனுமதியும் கிடைத்த நிலையில் கடையில் பணியாற்றியவர்கள் தேவையான உணவு, குளிருக்கு ஜாக்கெட் என கொடுத்து ஜூலியனுக்கு உதவியிருக்கிறார்கள். வெளியே அதிக குளிர் நிலவிய நிலையில் அங்கிருந்து ஜூலியனை வெளியேற சொல்ல வேண்டாம் எனவும் நல்ல எண்ணத்தில் நினைத்துள்ளனர்.
ஆனால் விவேக் சைனி மட்டும் அந்த நபரை வெளியே செல்லும்படியும், இல்லாவிட்டால் போலீசை கூப்பிடுவேன் என கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜூலியன் விவேக் பணி முடிந்து வீட்டுக்கு செல்ல புறப்படும்போது சுத்தியல் ஒன்றால் சரமாரியாக தாக்கியுள்ளார். கிட்டதட்ட 50க்கும் மேற்பட்ட முறை விவேக் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஜூலியனின் வெறிச்செயலை கண்டு திகைத்துப்போன வணிக வளாக ஊழியர்கல் தெறித்து ஓடினர். உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், விவேக் சைனியின் உடலுக்கு அருகே சுத்தியலுடன் ஜூலியன் நின்றிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் அவர் நடத்திய சுத்தியல் தாக்குதலில் விவேக் இறந்து விட்டார். அவருடைய உடல் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கும் நடந்து முடிந்துள்ள நிலையில் இந்த சம்பவம் வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விவேக் சைனியின் உறவினர் தெரிவிக்கும்போது, ‘ஜூலியன் அடிக்கடி விவேக்கிடம் சிகரெட் கேட்டு வந்துள்ளார். ஆனால் அடைக்கலம் கொடுத்த இடத்தில் இப்படி கேட்டு வந்து தொந்தரவு செய்யக்கூடாது. இல்லாவிட்டால் போலீசில் சொல்லி விடுவேன் என விவேக் சொல்லியுள்ளார். இதனால் ஆத்திரத்தில் ஜூலியன் இந்த கொலையில் ஈடுபட்டுள்ளார்’ என தெரிவித்துள்ளனர். மேலும் ஜூலியன் ஒரு போதை ஆசாமி என்றும் சைக்கோ என்றும் அந்த உறவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.