திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து கொலைகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக முன்விரோதம் காரணமாகவும், குடும்பத்தகராறு, பழிவாங்கும் நோக்கத்தோடு கொலை, உள்ளிட்ட ஒரே மாதத்தில் தொடர் கொலை மற்றும் குற்றச் சம்பவங்கள்  நடைபெற்று உள்ளன. மேலும் கொலைக்கு காரணமான குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவின் பெயரில் 20-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த நிலையில், மேலும் ஒரு கொலை சம்பவம் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற்றுள்ளது.

 

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் பெண் தராததால் ஆத்திரம் அடைந்து குழவி கல்லை தலையில் போட்டு மாணவி படுகொலை செய்யபட்டுள்ளார். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த பாண்டியன் மகள் மவுலிகா (18). முத்துப்பேட்டை அருகே பேட்டையில் உள்ள பாட்டி ராஜகுமாரி வீட்டில் தங்கி தஞ்சையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் இவரது உறவினரான திருக்களார் பொதியப்பன் மகன் சிவசங்கரன்(28) மவுலிகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இவர் தம்பிக்கோட்டை, ஜாம்புவான்னோடை பகுதியில் உள்ள இறால் பண்ணையில் வேலைபார்த்து வந்த நிலையில் அவருக்கு பெண்தர மவுலியாவின் பெற்றோர் மறுத்துள்ளனர். 



இதனால் ஆத்திரமடைந்த சிவசங்கரன்  நேற்று (24-ஆம் தேதி) இரவு சுமார் 12 மணியளவில் ராஜகுமாரி வீட்டுற்கு சென்று அங்கு தூங்கிக்கொண்டிருந்த மவுலியாவின் தலையில் அம்மிக்கல்லை(குழவி) தூக்கிப்போட்டுள்ளார். இதையடுத்து அவரது அலறல் சத்தம்கேட்டு எழுந்த உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் மவுலியாவை மீட்டு சிகிச்சைக்காக முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்தநிலையில் தப்பியோடி தம்பிக்கோட்டையில் பதுங்கி இருந்த சிவசங்கரனை மக்கள் பிடித்து முத்துப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

 

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை மவுலிகா உயிரிழந்தார். இதையடுத்து முத்துப்பேட்டை காவல் துறையினர் சிவசங்கரன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி மவுலிகா உயிரிழந்ததற்கு காரணமான சிவசங்கரனுக்கு காவல்துறையினர் தூக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என மவுலிகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர் மேலும் ஒருதலை காதல் காரணமாக கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டிருப்பது மாணவர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் மேலும் கிராமங்கள்தோறும் ரோந்து பணிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு திருவாரூர் மாவட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்