புழல் அருகே திருமணம் நடக்க இருந்த கடைசி நேரத்தில் கட்டாய திருமணத்தை தடுக்ககோரி வாட்ஸ் அப் வீடியோ அனுப்பிய மணப்பெண்ணின் புகாரால் போலீசார் திருமணத்தை தடுத்து பெண்ணை மீட்டுள்ளனர் காவல்துறையினர். சென்னை புழல் அடுத்த காவாங்கரை கண்ணப்ப சாமி நகரைச் சேர்ந்தவர் தமிழ் முன் அன்சாரி. இவரது மகள் ஜன்னதுல் பிர்தௌஸ். இவருக்கு அவரது பெற்றோர்கள் அவரது முறை மாமான் காஜா மொய்தீன் என்பவரை திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்து அதற்குண்டான பணிகளில் ஈடுபட்டு திருமண வேலைகள் நடந்து வந்தன.
இந்நிலையில், மணப்பெண் அவரது செல்போனில் இருந்து, வாட்ஸ் அப் மூலம் எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை எனவும், தனக்கு திருமணம் செய்து வைக்க உள்ள எனது மாமன் பல்வேறு பெண்களுடன் தொடர்பில் உள்ளவர் என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். எனவே இந்த திருமணத்தை எனது உறவினர்களும் பெற்றோர்களும் கட்டாயப்படுத்தி எனது விருப்பம் இல்லாமல் நடத்தி வைக்க முயற்சிப்பதாக கூறினர். மேலும் இந்த திருமணம் நடைபெற்றால் அதன் பிறகு தான் உயிருடன் இருக்கப் போவதில்லை எனவும் உருக்கமாக வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்த வீடியோ வைரலாக பரவி வந்த நிலையில், இதுகுறித்து அந்தப் பெண் புழல் காவல் நிலையத்திற்கு புகார் ஒன்றையும் அனுப்பி இருந்தார். அதனை அடுத்து புழல் போலீசார் திருமணம் நடக்க இருந்த இடத்தில் நேற்று காலையில் அவரது வீட்டிற்கு சென்று சம்பந்தப்பட்ட அந்த பெண்ணை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
திருமணம் நடைபெற ஒரு மணிநேரமே இருந்த நிலையில் மணப்பெண்ணை போலீசார் அழைத்து சென்று திருமணத்தை தடுத்தி நிறுத்தினர். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார் அடிப்படையில் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்தப் பெண் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார், அதில் பல பெண்களுடன் தனது முறைமாமன் தொடர்பு இருப்பதாகவும் அதனால் இந்த திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அவர் வெளியிட்டுள்ள வாட்ஸ்அப் வீடியோவில், நான் இன்னும் எவ்வளவு நாள் உயிரோடு இருப்பேன் என்று தெரியாது, ஆனால் ஒரு ஆணின் கைபேசியில், அந்த ஆணின் குடும்பத்தை சார்ந்தவர்களின் புகைப்படம் தவிர வேறு யார் புகைப்படம் இல்லாத அளவிற்கு போராட வேண்டும். சின்ன வயதில் இருந்து என்னுடைய மாமனை எனக்கு தெரியும், அவன் சின்ன வயதில் இருந்தே இது போன்ற தவறான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். சில சமயங்களில் என்னுடைய போட்டோவை கூட தவறான முறையில் சித்தரித்து காட்டியுள்ளார்.
இதுகுறித்து ஒரு முறை பெண்கள் உதவி மையத்தை தொடர்பு கொண்டு கூறியுள்ளேன் , அப்போது என்னை என் குடும்பத்தை சேர்ந்தவர்கள் சமாதானப்படுத்தி விட்டார்கள். ஆனால் எனக்கு அவருடன் திருமணம் என்று நினைக்கும்போது என் மனது உடைந்து மனவருத்தத்துடன் இருக்கிறேன். தயவுசெய்து காப்பாற்றுங்கள் என கூறி வீடியோ பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.