சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி அடுத்துள்ள தாசநாயக்கன்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் வெங்கடேசன். 80 வயதான இவருக்கு சொந்தமான ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டையும் பென்ஷன் பணம் இரண்டு லட்சத்தையும் அவரது மகன் சீனிவாசன் அபகரித்து கொண்டு வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட முதியவர் மல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.



ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்ட வெங்கடேசன் தனது மகளின் அரவணைப்பில் இருந்தார். வெங்கடேசனின் மனைவி கடந்த ஆண்டு இறந்த நிலையிலும், உடலை வீட்டிற்குள் அனுமதிக்காமல் மகன் கொடுமைப்படுத்தியதாக வேதனையுடன் இறுதி காலத்தை கழித்து வருகிறார். சொந்த வீட்டில் தான் இறுதி காலத்தில் குடியிருக்க அனுமதிக்குமாறு மகனிடம் பலமுறை கேட்டு வந்துள்ளார் முதியவர் வெங்கேடேசன். ஆனால், தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றாமல் சீனிவாசன் வீட்டை வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இதனால் மனமுடைந்த முதியவர் வெங்கடேசன் தனது வீட்டை மீட்டுக்கொடுக்குமாறும், மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் கையில் வைத்திருந்த ஆவணத்தின் படி வீடு முதியவர் வெங்கடேசன் மற்றும் அவரது மனைவி இருக்கும் வரை அவர்கள் கீழ் வீட்டில் வாசித்துக் கொள்ளலாம். அவர்களது காலத்திற்குப் பிறகு அந்த வீடு மகனுக்கு சொந்தமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 



இந்தநிலையில் முதியவரின் மகள் சாந்தி கூறுகையில், தாயின் இறப்பிற்குப் பிறகு தந்தையை வயது முதிர்ந்த காலத்தில் வீட்டை விட்டு துரத்திவிட்டார் தனது தம்பி. அதுமட்டுமன்றி அவருக்கு வந்த பென்சன் தொகையான ரூபாய் இரண்டு லட்சத்தையும் வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டார். தனது தந்தைக்கு தினசரி ஆயிரம் ரூபாய் மருத்துவ செலவு ஆகிறது. தந்தையிடமிருந்து சொத்துக்களை பிடுங்கி வீட்டை விட்டு வெளியே அனுப்பிய நிலையில் அவரை எனது வீட்டில் வைத்து பராமரித்து வருகிறேன். நாளுக்கு நாள் அவருக்கு உடல்நிலை மோசமாகிக் கொண்டே போகும் நிலையில் அவரது இறுதி ஆசையாக தனது மனைவி வாழ்ந்த வீட்டில் தனது உயிரும் புரிய வேண்டும் என்று நினைக்கிறார். எனவே காவல் துறையினர் இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.


இதையடுத்து தகவல் அறிந்து வந்த மல்லூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து முதியவரை சமாதானப்படுத்தி தங்களுக்குச் சேர வேண்டிய சொத்தை மகனிடம் இருந்து பெற்று தருவதாக காவல்துறையினர் கூறியதை அடுத்து தர்ணா போராட்டத்தை கைவிட்டார். கைகளைக் கூப்பி கண்ணீர் குரலுடன் முதியவர் வைக்கும் வேண்டுகோள் அனைவர் மனதையும் உருக வைக்கிறது.