மதுரையில் இளம்பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தலா மூன்று ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 

இருவருக்கும் தலா மூன்று ஆயுள் தண்டனைகள் வீதம் 32 ஆண்டுகள் சிறை தண்டனையும், 25ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.

 

கடந்த 2021 -ம் ஆண்டு நவம்பர் 12 -ம் தேதி நள்ளிரவில் மதுரை மாநகர் அண்ணாநகர் பகுதியில் உள்ள செண்பகத்தோட்டம் மீனவ சங்க கட்டிடம் அருகே ஒரு பெண்ணிடம் ரவுடி குருவி விஜய்  மற்றும் அவனது நண்பன் பாலியல் வன்கொடுமை செய்தபோது அந்தப்பெண் கூச்சலிட்டுள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர்  100-க்கு போன் செய்ததால் சம்பவ இடத்திற்கு அண்ணாநகர் காவல்துறையினர் விரைந்துசென்றனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் குருவி விஜய் மற்றும் அவனது கூட்டாளியான மௌலி கார்த்திக் ஆகியோர் தாக்க முயன்றனர். இதன் காரணமாக ரவுடி  குருவி விஜயை காவல்துறையினர் காலில் துப்பாக்கியால் சுட்டதில் காலில் காயம் ஏற்பட்டதையடுத்து குருவி விஜய் மற்றும் மௌலி கார்த்திக் ஆகிய இருவர் மீதும் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புசட்டம் உள்ளிட்ட 10- க்கும் மேற்பட்ட  பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

 


 


 

 

இந்த வழக்கானது மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில் வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி.நாகராஜன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் மதுரை மேலமடை எழில்நகரை சேர்ந்த குருவி விஜய் (34) மற்றும்  மௌலி கார்த்திக் (31) ஆகிய இருவருக்கும் தலா மூன்று ஆயுள் தண்டனைகள் வீதம் 32 ஆண்டுகள் சிறை தண்டனையும், 25ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். குற்றவாளிகளான இருவரும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ஆவார்கள். குற்றவாளியான விஜய் என்ற குருவி விஜய்க்கு அனைத்து காவல் நிலையங்களிலும் அடிதடி மற்றும் கஞ்சா வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.