திருமணமாகி மூன்றாவது நாளிலேயே கர்ப்பிணி புதுப்பெண் எரித்துக் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் கணவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை சோழவந்தானை அடுத்த ராயபுரதைச் சேர்ந்தவர்கள் சகாயராஜ் - செல்வமேரி தம்பதி. இவர்களது மகள் கிளாடிஸ் ராணி வயது (21) என்பவர் மதுரை அவனியாபுரம் பகுதியில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரி அருகே உள்ள வைக்கம் பெரியார் நகரைச் சேர்ந்த ஜோதிமணி வயது 23 என்பவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது. தோழிகள் சிலர் கண்டித்தும் கிளாடிஸ் ராணி கேட்கவில்லை என சொல்லப்படுகிறது. கிளாடிஸ் ராணி - ஜோதிமணி காதல் ஒரு கட்டத்திற்கு மேல் எல்லை மீற கிளாடிஸ் ராணி, 5 மாதம் கருவுற்றிருக்கும் தகவல் அவரின் வீட்டுக்குத் தெரியவந்துள்ளது.
அப்போது கிளாடிஸ் ராணி, பெரியார் நகரை சேர்ந்த ஜோதிமணி என்பவர்தான் தனது காதலர் எனவும், குழந்தையின் தந்தை எனவும் உண்மையை உடைத்துள்ளார். கிளாடிஸ் ராணியின் பெற்றோர் அவரது காதலன் ஜோதிமணியை அழைத்துப் பேசியுள்ளனர். அப்போது ஜோதிமணி ’கர்ப்பத்திற்கு காரணம் நான் இல்லை’ என கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து ஜோதிமணியை கண்டித்து, ஜோதிமணியின் பெற்றோருக்கு தெரியாமல் இருவருக்கும் கடந்த ஆகஸ்ட் 2- ம் தேதி திருமணம் செய்து வைத்துள்ளனர் கிளாடிஸின் பெற்றோர். இதனை தொடர்ந்து ஜோதிமணி வைக்கம் பெரியார் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு, ’ஆசிர்வாதம் வாங்கலாம் வா’ என அழைத்து செல்வதாக கடந்த 4- ம் தேதி கிளாடிஸ் ராணியை அழைத்துச் சென்று அவனியாபுரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் உள்ள முட்புதரில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, ஜோதிமணி மனைவியை காணவில்லை என பெண்ணின் பெற்றோரிடம் கூறியதைத் தொடர்ந்து சோழவந்தான் காவல் நிலையத்தில் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஜோதிமணியிடம் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அவனியாபுரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கிளாடிஸ் ராணியை எரித்துக்கொலை செய்ததாக கணவர் ஜோதிமணி ஒப்புக்கொண்டார்.எனவே சம்பவ இடத்திற்கு சென்ற சோழவந்தான் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஜோதிமணியின் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
ஜோதிமணி கொலையை தனியாளாக செய்தாரா இல்லை நண்பர்களுடன் இணைந்து கொலையை செய்தாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!