தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே, பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் இன்னும் சில வாரங்களில் தமிழகத்தில் பருவமழையும் துவங்க உள்ளது. அதேபோல் காஞ்சிபுரத்தில் கடந்த ஒரு வார காலமாக தினமும் மாலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும் மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரத்தில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மின் கம்பங்கள் உள்ளிட்டவற்றை முறையாக பராமரிக்காத காரணத்தினால், ஆங்காங்கே மின் கம்பங்கள் மற்றும் மின் ஒயர்கள் சேதமடைந்து காணப்படுகின்றன, மேலும் பூமிக்கு அடியில் இருந்து மின் கம்பங்களுக்கு செல்லும் ஒயர்கள் முறையாக பராமரிப்பு செய்யாத காரணத்தினால் அவையும் பழுதடைந்து காணப்படுகிறது. 



 

காஞ்சிபுரம் பெருநகராட்சி பகுதிகளில் மாடுகளை வளர்க்கும் சிலர் தங்களுடைய மாடுகளை, பஜார் உள்ளிட்ட இடங்களில் வீணாகும் காய்கறி பழங்கள் உள்ளிட்ட பொருட்களை சாப்பிடுவதற்காக அவிழ்த்து விட்டு விடுகிறார்கள். இதன் காரணமாக மாடுகள் காஞ்சிபுரம் நகராட்சி பகுதிகளில் சுற்றித்திரிவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. மாடுகளை வெளியில் சுற்றவிடக்கூடாது என்று பெருநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தாலும், அவற்றை கேட்காமல் மாடுகளை வெளியே சுற்ற விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.



இந்நிலையில், முறையாக கம்பங்கள் பராமரிக்காத காரணத்தினால் பூமியிலிருந்து மின் கம்பத்திற்கு செல்லும் ஒயர்கள் பழுதடைந்துள்ள காரணத்தினாலும் அதனருகே செல்லும் மாடுகள் மீது அவை பட்டு அதன்மூலம் மின்சாரம் தாக்கி,  இதுவரை பத்துக்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அருகே உள்ள சாலை தெருவில் இவ்வாறு பழுதடைந்த மின் கம்பத்தில் மாடு மின்சாரம் தாக்கி உயிர் இழக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



தற்போது, வெளியாகியுள்ள சிசிடிவி காட்சியில், ஒரு வீட்டின் அருகே மாடு சென்று நிற்கிறது, அந்த மாட்டினை அந்த வீட்டின் உரிமையாளர் அடித்து துரத்துகிறார். இதனைத் தொடர்ந்து அந்த மாடு அங்கிருந்து செல்ல மறுக்கிறது, இருந்தும் மீண்டும் அடித்து துரத்தும்பொழுது அங்கிருந்து செல்லும் மாடு, அருகில் இருக்கும் மின்கம்பத்தை நோக்கி செல்லும்பொழுது மின்சாரம் தாக்கி துடிதுடித்து உயிரிழந்துள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் வீடியோ பார்ப்போரின் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.

 



சம்பவம்  நடந்த இடத்தில் கவனக்குறைவால் மனிதர்கள் யாராவது சென்றிருந்தால், மிகப்பெரிய அபாயத்தை ஏற்படுத்தியிருக்கும், நகரின் பல்வேறு பகுதிகளில் இதே பிரச்சினை இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். எனவே இந்த விவகாரத்தில் நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

 

மழைக் காலங்களில் பராமரிப்பு இல்லாமல் மின்சார கம்பங்கள் இருப்பது மனித உயிருக்கே ஆபத்தாக போய்விடும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையரை தொடர்புகொள்ள முயற்சித்தபோது பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.