சர்வதேச விமான நிலையமான சென்னை விமான நிலையத்தில் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அதிக அளவு மக்கள் தொகை கொண்ட சென்னை வியாபாரிகளுக்கு மட்டுமல்ல போதைப் பொருட்கள் விற்கும் மாபியாக்களுக்கு நல்ல சந்தையாக இருக்கிறது. இதனால் சென்னைக்கு அதிக அளவு போதைப்பொருட்கள் விமான நிலையம் மூலமாக கடத்தி வரப்படுகிறது. பல்வேறு சித்து விளையாட்டுகளை செய்து போதைப் பொருட்களை கடத்தி வந்தாலும் காவல்துறையினர் அவற்றை மோப்பம் பிடித்து போதை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

 



அந்த வகையில் இன்று மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து ரூ.70 கோடி மதிப்புடைய 10 கிலோ ஹெராயின் போதைப்பொருளை கடத்திவந்த 2 வெளிநாட்டு பெண்கள் சென்னை விமான நிலையத்தில் கைது.நோயாளிகள் போல் நடித்து சக்கர நாற்காலியில் வந்தவா்கள் சிக்கினார்.சா்வதேச போதை கடத்தும் கும்பல் சென்னைக்கு பெரிய அளவில் போதைப் பொருட்கள் கடத்தி வருவதாக சென்னை விமானநிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னை விமானநிலைய சுங்கத்துறையினா் நேற்று இரவிலிருந்து சென்னை சா்வதேச  விமானநிலையத்தில் தீவிர கண்காணிப்பில் இருந்தனா்.



இந்நிலையில் இன்று அதிகாலை கத்தாா் நாட்டு தலைநகா் தோகாவிலிருந்து சிறப்பு பயணிகள் விமானம் சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது.அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் தீவிரமாக கண்காணித்தனா். அப்போது ஒரு வெளிநாட்டு பெண் பயணியை சக்கர நாற்காலியில் வைத்து மற்றொரு வெளிநாட்டு பெண் தள்ளிக்கொண்டு வந்தாா்.ஆனால் சக்கர நாற்காலியில் இருந்த சுமாா் 45 வயது பெண் உடல்நலம் பாதித்தவா் போல் இல்லை.



 

இதையடுத்து சந்தேகமடைந்த சுங்கத்துறையினா், அப்பெண்களை நிறுத்தி விசாரித்தனா்.அப்போது சக்கர நாற்காலியில் வந்த பெண் ஜிம்பாவே நாட்டை சோ்ந்தவா். அவா் இதய நோயாளி. அவா் சிகிச்சைக்காக மருத்துவ விசாவில் சென்னை வந்துள்ளாா். அதைப்போல் சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு வந்த சுமாா் 30 வயது பெண் தெற்கு ஆப்ரிக்கா நாட்டை சோ்ந்தவா். ஜிம்பாவே பெண்ணுக்கு மருத்துவ உதவியாளராக, அவரும் மருத்துவ விசாவில் வந்துள்ளதாக தெரிவித்தனா். அதோடு அவா்கள் சென்னையில் எந்த மருத்துவமனைக்கு செல்கின்றனா் என்ற விபரங்கள் இல்லை. அதோடு சென்னைக்கு வந்து டெல்லி மருத்துவமனைக்கு செல்வதாக மாற்றி பேசினா்.



இதையடுத்து சுங்கத்துறையினருக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து இரு வெளிநாட்டு பெண்களையும் தனி அறைக்கு அழைத்து சென்று பெண் சுங்க அதிகாரிகள் உதவியுடன் சோதனையிட்டனா்.அவா்கள் வைத்திருந்த டிராலி சூட்கேஸ்,பைகளில் மொத்தம் 10 கிலோ ஹெராயின் போதைப் பொருட்கள் இருந்தன. அதன் சா்வதேச மதிப்பு ரூ.70 கோடி. சுங்கத்துறையினா் இருவரையும் கைது செய்து போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனா்.அதோடு இவா்கள் சென்னையில் யாரிடம் இந்த போதை பொருளை கொடுக்க கொண்டுவந்தனா் என்றும் தீவிர விசாரணை நடத்துகின்றனா். இந்த சம்பவம் சென்னை விமானநிலையத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 



இதேபோல் கடந்த மாதம் 6-ஆம் தேதி ரூ.100 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் ஹெராயின் போன்ற விலை உயர்ந்த போதைப்பொருட்கள் கடத்தி வருவது கடந்த சில மாதங்களாகவே வாடிக்கையாகி உள்ளது.