ஆந்திராவில் மனைவியைக்கொன்று விட்டு 6 நாட்களாக சூட்கேஸில் பதுக்கிவைத்து உடலைத் தீயிட்டு எரித்ததோடு, கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்து விட்டதாக மனைவியின் குடும்பத்தாரிடம் பொய்யான தகவலை தெரிவித்துள்ளார் கொலை செய்த ஸ்ரீகாந்த் ரெட்டி.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள பட்வால் பகுதியைச்சேர்ந்தவர் 30 வயதான ஸ்ரீகாந்த் ரெட்டி. இவருக்கும் புவனேஸ்வரி என்பவருக்கும் திருமணம் ஆன நிலையில் 18 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. மனைவி புவனேஸ்வரி ஹைதராபாத்தில் உள்ள ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். கொரோனா தொற்றின் காரணமாக வீட்டில் இருந்தே பணிபுரிந்துவருவதால் இவர்கள் கடந்த 3 மாதக் காலமாக சித்தூர் மாவட்டத்தில் உள்ள ராமசமுத்திரம் கிராமத்தில் வசித்து வருகின்றனர். ஆனால் ஸ்ரீகாந்த் ரெட்டி வேலை இல்லாமல் இருந்ததன் காரணமாக அடிக்கடி இருவருக்கும் சண்டை ஏற்படும் எனவும், வாக்கு வாதம் முற்றிய நிலையில் மனைவியை அடித்துக்கொலை செய்திருப்பார் என போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மனைவியை கொன்றுவிட்டு, கொரோனா தொற்றின் காரணமாக இருந்ததாக அவரது குடும்பத்தினரிடம் ஸ்ரீகாந்த் பொய்யான தகவலைத் தெரிவித்துள்ளார். மேலும் யாருக்கும் தெரியாமல் மனைவியின் உடலை சூட்கேஸில் மறைத்து வைத்ததோடு, தீயிட்டு எரித்து விட்டோம் என்ற மனநிலையில் இருந்த கணவர் போலீசாரின் விசாரணைக்குள் எப்படி சிக்கினார்?
கடந்த ஜூன் 23 ஆம் தேதியன்று, அலிபிரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, ஸ்ரீவெங்கட ரமணா அரசு மருத்துவமனைக்கு அருகில் சூட்கேஸில் எரிந்த நிலையில் பெண் உடல் இருப்பதை கண்டறிந்துள்ளனர். பின்னர் தடயவியல் சோதனை மேற்கொண்ட போதுதான் அந்த பெண் புவனேஸ்வரி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து உயிரிழந்த புவனேஸ்வரியின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்து அவர் வசித்த பகுதிக்கு போலீசார் சென்றனர். தொடர் விசாரணையின்போது, கிடைக்கப்பட்ட சிசிடிவி கேமிரா காட்சியில், உயிரிழந்த புவனேஸ்வரியின் கணவர் ஸ்ரீகாந்த ரெட்டி சிவப்பு நிற சூட்கேசுடன் கையில் 18 மாத குழந்தையும் எடுத்துக்கொண்டு காரில் சென்றுள்ளதைக் கண்டறிந்தனர். அந்த கார் அரசு மருத்துவமனைக்கு பகுதிக்கு சென்றதாகவும் அங்கு வைத்து தான் மனைவியின் உடலை எரித்துள்ளார் கணவர் ஸ்ரீகாந்த் ரெட்டி. இதனையடுத்து உடலை அப்புறப்படுத்த ரெட்டிக்கு உதவியதாக ஒப்புக்கொண்ட கார் டிரைவரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். வீட்டிலிருந்து மனைவியைக் கொன்று சூட்கேசில் எடுத்துச்செல்லும் காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
மேலும் இதுவரை சம்வம் நடந்த நாளிலிருந்து தலைமறைவாக உள்ள ரெட்டியினை போலீசார் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதை கேள்வி கேட்டதால் ஆத்திரத்தில் அவரைக் கொன்று சூட்கேசில் கொண்டு சென்று எரித்ததாக வாக்குமூலம் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.