அதீத வளர்ச்சியை நோக்கி, சென்னை பயணித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், சென்னை புறநகர் பகுதிகளும் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கு ஏற்றார் போல் சென்னை புறநகர் பகுதிகளில் குற்ற சம்பவங்களும் அதிகரித்து வண்ணம் உள்ளன. குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளாக உள்ள, பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் தங்கி, தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை பார்க்கும் இளைஞர்களை குறி வைத்து போதை பொருட்கள் விற்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. கஞ்சா, போதை மாத்திரைகள், சில சமயங்களில் ஹெராயன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் அப்பகுதியில் இருக்கும் இளைஞர்களுக்கு விற்பனை செய்வதற்காக , கொண்டு செல்லும் பொழுது குற்றவாளிகளை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து சிறையில் அடிப்பது தொடர்கதை ஆகியுள்ளது.

 

இதுபோக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் வீகெண்ட் பார்ட்டி என்ற பெயரில் பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஏராளமான ரிசாட்களில், கேளிக்கை விருந்துகள் நடைபெறுகிறது.  இதுபோல விருந்துகள் நடைபெறும் போது  ,சட்டவிரோதமாக போதைப் பொருட்கள் புழங்குவது அதிகரித்துள்ளது. எனவே இதற்காக காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய தீவிர தேர்தல் வேட்டையை தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று சென்னை அடையார் பகுதியில், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அந்த இளைஞர் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்துள்ளார்.

 

இதனை அடுத்து காவல்துறையினர் அந்த நபரை விசாரணை செய்தனர். உடனடியாக அந்த நபர் வைத்திருந்த உடைமைகளை சோதனை செய்தனர். அதில், 150 அட்டைகள் அடங்கிய 1500 போதை மாத்திரைகள் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதுகுறித்து கேட்டபோது, இளைஞர் சொந்த பயன்பாட்டிற்காக வைத்திருப்பதாக ஏதேதோ காரணம் சொல்லியுள்ளார். இதையடுத்து இளைஞரை காவல் நிலையம் அழைத்துச்சென்ற போலீசார் தங்களது பாணியில் விசாரித்தனர். அதில், பிடிபட்ட இளைஞர் சென்னை ஆழ்வார்பேட்டை பீமண்ண கார்டன் பகுதியைச்சேர்ந்த கோகுல் என்பதும் ஓஎம்ஆர் மற்றும் இசிஆர் சாலைகளில் நடைபெறும் கேளிக்கை விருந்தில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் மற்றும் தங்கி வேலை பார்க்கும் இளைஞர்களுக்கு தொடர்ந்து பல மாதங்களாக போதை மாத்திரைகள் விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.






 

மேலும், கோகுல் மீது ஏற்கனவே 3 போதை மாத்திரைகள் விற்பனை தொடர்பான குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதன் அடுத்து சம்பந்தப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து பல மாதங்களாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வரும், முக்கிய இவரை காவல் துறையினர் கைது செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.