இந்தியாவே கொரோனா பயத்தில் இருக்கும்போது, சாராயம் காய்ச்சுவது, காய்ச்சிய சாராயத்தை வீட்டிற்கே சென்று டோர் டெலிவரி செய்வது என ஏக பிசியாக இருக்கிறது திருவண்ணாமலை மாவட்டம். வானபுரம், தச்சம்பட்டு, வெறையூர் பகுதிகளில் உள்ள குடிமகன்கள் தொலைபேசியில் அழைத்து சொன்னால்போதும், உணவு டெலிவரி செய்வதுபோல், வீடு தேடி வந்து சாராயமும் விற்பனை செய்யப்படுகிறது.
முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், திருவண்ணாமலை மாவட்டத்து ஆசாமிகளோ பக்கத்து மாநிலமான கர்நாடாகவிற்கு சென்று மதுபாட்டில்களை வாங்கி, சில போலீசின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டும், சில போலீசின் கைகளில் காசை அமுக்கிவிட்டும், திருவண்ணாமலையில் வந்து அதனை விற்பனை செய்கின்றனர். அதுமட்டுமா, இந்த ஊரடங்கை பயன்படுத்தி சிலர் ஊரல் போட்டு சாராயமே காய்ச்சி வருகின்றனர். காய்ச்சும் சாராயத்தை பாக்கெட்டுகளில் தண்ணீர் பொட்டலங்கள் போல் அடைத்து, வீட்டிற்கே சென்று டோர் டெலிவரியும் செய்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தின் கடைகோடி எல்லையாக இருக்கும் வானபுரம், வெறையூர், தச்சம்பட்டு போன்ற ஊர்களில் வனப்பகுதிகள் மற்றும் மலைகிராமங்கள் அதிகமாக உள்ளன. இதனை சாதகமாக பயன்படுத்தி, மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சி, ஊரடங்கால் வெளியில் வரமுடியாதவர்களுக்கு பாக்கெட்டுகள் மற்றும் பாட்டில்களில் அடைத்து, வீட்டிற்கே சென்று சப்ளை செய்து வருகின்றனர். ஒரு போன் செய்தால் போதும், ஒரு சில நிமிடங்களில் சாராய பாக்கெட்டுகள் வீட்டிற்கு சென்றும்விடும் அளவிற்கு காற்றைவிட வேகமாக கனன்று சுழன்று விற்பனை செய்கிறார்கள்.
அந்த பகுதிகளில் உள்ள மக்கள் இதனை காவல்நிலையத்திற்கு சொன்னாலும், இதுவரை யாரும் இதனை கண்டுக்கொள்ளவில்லையாம். கண்டுகொள்ளும் அளவிற்கு யாராவது புகார் கொடுத்தால், கன்னம் ரெண்டும் பழுத்துவிடும் அளவிற்கு அடி விழும் என்பதால் பலரும் கண்டும் காணாமலும் இருக்கின்றனர். கொரோனா ஒரு பக்கம் உயிர்களை கொன்றுகுவித்து வரும் நிலையில், இதுபோன்ற கள்ளச்சாரயத்தினால் மீண்டும் தமிழ்நாட்டில் பலர் உயிரிழக்க நேரிடும், பலருக்கு பார்வையிழப்பு ஏற்படக்கூடும் என அஞ்சும் சமூக ஆர்வலர்கள், உடனடியாக இதுபோன்ற சட்டவிரோத செயல்களை தடுத்து நிறுத்தவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
டாஸ்மாக் மதுபான கடைகள் இல்லாததால், குடிக்காமல் இருக்க முடியாமல் இருக்கும் ’குடி’ மகன்களின் பலவீனத்தை பயன்படுத்தி, இதுபோன்று பாக்கெட்டுகளிலும் பாட்டில்களிலும் ஆயிரம் முதல் ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் வரையில் சாராயம் சன்னமாக விற்கப்பட்டு வருகிறது. இப்படி விற்கப்படும் சாராயங்களால் பலனடையும் பலர், நாளடைவில் இன்னும் தீவிரமான சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், கண்டுக்கொள்ளாமல் இருக்கும் காவல்துறை கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் என கைது செய்ய வேண்டும்.