ஐஐடி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்டப் புகாரில் ஐஏஎஸ் அதிகாரி கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மாணவிகளுக்கு மது விருந்து:


பாதிக்கப்பட்ட பெண் உள்ளிட்ட 8 மாணவர்கள் இண்டர்ன்ஷிப் பயிற்சிக்காக ஜார்கண்ட் மாநிலம் குண்ட்டிக்கு வந்திருந்தனர். அப்போது துணை வளர்ச்சி அதிகாரியின் இல்லத்தில் கடந்த சனிக்கிழமை ஜூலை 2ம் தேதி நடைபெற்ற விருந்தில் கலந்து கொண்டனர். அங்கு மதுவும் பரிமாறப்பட்டுள்ளது. மாணவர்களும் மது குடித்துள்ளனர். அப்போது மாணவி தனியாக இருந்த மாணவியிடம், ஐஏஎஸ் அதிகாரியான  சையது ரியாஸ் அகமது என்பவர் ஞாயிறு அதிகாலையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இவர் துணை வட்டாட்சியராக குண்ட்டி பகுதியில் வேலை பார்த்து வருகிறார்.


ஐஏஎஸ் அதிகாரி கைது:


ஐஏஎஸ் அதிகாரி தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அப்பெண் காவல்துறையில் புகாரளித்தார். மாணவியின் புகாரின் அடிப்படையில் ஐஏஎஸ் அதிகாரி மீது பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக இந்திய தண்டனைச் சட்டம் 354, 354ஏ, 509 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆரம்பகட்ட விசாரணையில் தான் பாலியல் சீண்டலில் ஈடுபடவில்லை என்று அவர் மறுத்து வந்துள்ளார். ஆனால் காவல்துறையின் தீவிர விசாரணையில் 2019 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான சையது ரியாஸ் மீது அளிக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு நிரூபணமானதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சையதுவிடம் காவல்துறையினர் தொடர்ந்து விச்சாரணை நடத்தி வருகின்றனர்.




திரும்ப அழைக்கப்பட்ட மாணவர்கள்:


மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் ஐஏஎஸ் அதிகாரி கைது செய்யப்பட்ட தகவல் பரவியதையடுத்து இண்டர்ன்ஷிப் சென்றிருந்த தங்கள் மாணவர்கள் அனைவரையும் உடனடியாக கல்லூரிக்குத் திரும்ப வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது. குண்ட்டி மாவட்டத்தில் எல்லாம் சிறப்பாகச் சென்று கொண்டிருக்கும் நிலையில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றிருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று அம்மாவட்டத்தின் ஆணையர் சஷி ரஞ்சன் கூறியுள்ளார்.




விரிவான தகவல் அனுப்பிய மாவட்ட நிர்வாகம்:


இச்சம்பவத்திற்குப் பிறகு, இச்சம்பவம் குறித்தும் மாவட்ட ஆட்சியர் மீதான புகார் குறித்தும் மாநில தலைமையகத்துக்கு குண்ட்டி  மாவட்ட நிர்வாகம் விரிவான கடிதம் அனுப்பியுள்ளது. ”வேலியே பயிரை மேய்வது” என்பது போல, மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பாக இருக்கவேண்டிய ஐஏஎஸ் அதிகாரியே பாலியல் குற்றவழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.