ஜாக்குலினைக் காப்பாற்றவே நான் சிறையில் இருக்கிறேன் என்று சுகேஷ் சந்திரசேகர் கூறியுள்ளார். யார் இந்த சுகேஷ் சந்திரசேகர் எனக் கேட்பவர்களுக்கு ஒரு சிறிய அறிமுகம். பெங்களூரைச் சேர்ந்த மோசடி நபர் சுகேஷ் சந்திரசேகர், தொழிலதிபர்கள் பலரை ஏமாற்றி பணம் பறித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவர். சுகேஷ் சந்திர சேகர் 17ஆம் வயதிலே ஆள் மாறாட்டம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டவர். இவர் 2006ஆம் ஆண்டு 10 வகுப்பு படிப்பை பாதியில் விட்டார். தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்தார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முதல் உள்ளூர்வாசிகள் வரை தனக்கு தெரியும் என்றார். அதுமட்டுமின்றி பல துணிச்சலான லஞ்ச நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தார். இது மட்டுமின்றி மிரட்டி பணம் பறிக்கும் தொழிலும் நடத்திவந்துள்ளார். இந்நிலையில்தான் அதிமுக இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்ததாக சிக்கி 2017ஆம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ரெலிகேர் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகி மல்விந்தர் சிங் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு சிறையில் உள்ளார். இவரது சகோதரர் சிவிந்தர் சிங்கின் மனைவி ஆதித்தி சிங்கை ஏமாற்றி பணம் பறித்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகரை அமலாக்கத்துறை ஏற்கனவே கைதுசெய்துள்ளது.
சிறையில் இருக்கும் மல்விந்திர் சிங்குக்கு ஜாமீன் பெற்றுத்தர ஏற்பாடு செய்வதாக கூறி அவரது மனைவி ஜாப்னாவிடம் ரூ.3.5 கோடி பணத்தை ஏமாற்றிசுகேஷ் சந்திரசேகர் மோசடி செய்துள்ளார். இது தொடர்பான வழக்கில் சுகேஷ் சந்திரசேகரை, அமலாக்கத்துறை மீண்டும் கைது செய்தது.
இந்நிலையில் 200 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜரான சுகேஷ் சந்திரசேகர், இந்த வழக்கில் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. ஜாக்குலினை காப்பாற்றவே நான் சிறையில் இருக்கிறேன். சிறையில் உள்ள ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் என்னை மிரட்டுகிறார். எமோஷன்ல் டார்ச்சர் செய்கிறார். அவர்களுக்கு எதிராக நான் தொடுத்த வழக்குகளை வாபஸ் வாங்குமாறு அச்சுறுத்துகிறார். அது குறித்து நான் துணை நிலை ஆளுநருக்கும் கடிதம் எழுதியுள்ளேன். ஆம் ஆத்மி அரசு சத்யேந்திர ஜெயினை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். வாதங்களைக் கேட்ட நீதிமன்றம் சுகேஷ் சந்திரசேகரை மேலும் 2 நாட்களுக்கு கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
என் வாழ்க்கையை அழித்தார்
ஆனால் கடந்த முறை நீதிமன்றத்தில் ஆஜரான ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், "சுகேஷ் என்னை தவறாக வழிநடத்தினார், என் வாழ்க்கையையும் என் வாழ்வாதாரத்தையும் அழித்தார். சுகேஷ் சந்திரசேகர் எனக்கு அரசு அதிகாரியாக அறிமுகமானார். என்னை ஏமாற்றுவதாக உணர்ந்தேன்" என்றும் அவர் கூறியிருந்தார். சுகேஷ் சந்திரசேகர் தன்னை சன் டிவியின் உரிமையாளர் என்றும், ஜெயலலிதாவை தனது அத்தை என்றும் கூறிக்கொண்டதாகவும் ஜக்குலின் குற்றம் சாட்டியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
ரூ.200 கோடிக்கு மேல் ஏமாற்றி மோசடி செய்து மிரட்டி பணம் பறித்ததற்காக சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து விலை உயர்ந்த பரிசுகளை வாங்கியதாக பெர்னாண்டஸ் அமலாக்க இயக்குனரகத்தின் (ED) விசாரணையை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.