ஹைதராபாத்தில் காதல் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான நான்கே மாதங்களில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.


இறந்த தம்பதி சாய் கவுட், நவநீத லக்‌ஷ்மி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். வீட்டின் படுக்கை அறையில் இருவரும் ஃபேனில் தூக்கில் தொங்கியநிலையில் மீட்கப்பட்டனர். காவல்துறையினர் சடலங்களை மீட்டு காந்தி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். சாய் கவுட், நவநீத லக்‌ஷ்மியும் காதலித்து வந்தனர். 4 மாதங்களுக்கு முன்னர் இருவரும் ஆர்ய சமாஜத்தில் திருமணம் செய்து கொண்டனர். வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தனர். சாய் கவுட் குடிபோதைக்கு அடிமையானவர் என்பதை நவநீத லக்‌ஷ்மி திருமணத்திற்குப் பின்னரே தெரிந்து கொண்டார். இதன் நிமித்தமாக இருவருக்கும் இடையே சண்டை நடந்துவந்தது. இந்நிலையில், இருவரும் தற்கொலை செய்து இறந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தற்கொலைகள் ஏன் நடக்கின்றன?


உலகில், ஒரு வருடத்தில் 8,00,000 தற்கொலைகள் நிகழ்கின்றன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஒவ்வொரு 40 நொடிகளில் நாம் ஒரு உயிரை தற்கொலையினால் இழக்கின்றோம். அந்த உயிர் ஒரு குழந்தையாகவோ, ஆசிரியராகவோ, மனைவியாகவோ இருக்கலாம். தற்கொலை முயற்சிகளோ அதை விட 25 மடங்கு அதிகமாக இருக்கின்றன என்கிறது ஆய்வு.


ஒவ்வொரு தற்கொலையின் பின்னணியிலும் பல்வேறு உயிரியல், உளவியல் மற்றும் சமூக காரணிகள் உண்டு. மன அழுத்தம் மட்டும் 90 சதவீத தற்கொலைகளுக்கு காரணமாகிறது. மது பழக்கத்தினால் தவறான முடிவுகளை தேடுகிறவர்கள் பலர். குடும்பத்தில் நெருங்கிய உறவினர்களை தற்கொலையால் இழந்தால், அவர்களுக்கு அதே எண்ணம் ஏற்படுவதற்கான மரபணு சார்ந்த ஆபத்து உண்டு. இதைத்தவிர, உளவியல் ரீதியான பிரச்சினைகள் இன்றைய தலைமுறையினருக்கு அதிகம்.


தற்கொலை எண்ணம் என்பது பல்வேறு சூழலில், எல்லா வயதினருக்கும் ஏற்படக் கூடிய எண்ணமே‚ தற்கொலை முயற்சிகள் முன்னெச்சரிக்கை ஏதுமின்றி நிகழ்ந்து விடுவதில்லை.


சட்டத்தின் பார்வையில், தற்கொலை முயற்சி குற்றமாக பார்க்கப்பட்ட காலம் மாறி, அது சிகிச்சை தரப்பட வேண்டிய மனரீதியான சிக்கல் என்றே கருதப்படுகிறது. 


உங்களுக்கு தற்கொலை எண்ணம் இருக்கிறதா?
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060).