முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாவதாக திருமணம் செய்த கணவர்,கணவரை சேர்த்து வைக்கக்கோரி  அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு குழந்தையுடன் அமர்ந்த பெண் - விருத்தாசலத்தில் பரபரப்பு


பெரம்பலூர் மாவட்டம் திருவாச்சூர்  கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, அம்சவல்லி இணையின் மூத்த மகள் சுபா என்பவருக்கும் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட சாவடி குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் விஜயா இவர்களின் மகன் வெங்கடேசனுக்கும் கடந்த 09.12.2016 ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் வெங்கடேசன் சுபா இருவருக்கும் 4 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது.




ஆனால் 4 வருடங்களுக்கு பிறகு தற்பொழுது அவர்கள் இருவருக்கும் ரக்ஷி்தா என்ற பெண் குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகிறது.  இருப்பினும், வெங்கடேசன் பெண் குழந்தை வேண்டாம் என கூறியதால், மீண்டும் மனைவி சுபாவிடம் தகராறு செய்து ஓராண்டாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர், இந்த நிலையில் வெங்கடேசன் விருத்தாசலத்தில் உள்ள செங்கல் சூளையில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார் இவர் செங்கல் சூளையில் இருந்து கற்களை ஏற்றிக்கொண்டு விருத்தாசலம் அடுத்த கார்மாங்குடி அருகே உள்ள தொழுதூர் கிராமத்துக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கமாக கொண்டிருக்கிறார்.



இந்த நிலையில் அந்த கிராமத்தில் வெங்கடேசன் உறவுக்காரரான பெண் மகாலட்சுமி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அந்த பெண்ணை கடந்த 8 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்துகொண்டு உள்ளார், மேலும் திருமணம் செய்த மகாலட்சுமி மூன்று மாத கர்ப்பிணியான நிலையில்,கணவர் வெங்கடேசன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டது தற்போது தெரியவரவே, இது குறித்து விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுபா புகார் அளிக்க வந்துள்ளார்.


புகாரை ஏற்க மறுத்ததால் புகாரினை ஏற்று முறையாக விசாரித்து, தன் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என அந்த பெண் காவல் நிலையம் முன்பு கை குழந்தையுடன் தர்ணாவில் ஈடுபட்டார். 


 



 


அப்பொழுது ஆய்வாளர் ரேவதி வாகனத்தில் அமர்ந்தபடியே புகாரை வாங்கிக் கொண்டு விசாரணை செய்கிறோம் என்று தெரிவித்தார். பின்னர் தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் தர்ணா போராட்டத்தை அப்பெண் கைவிட்டார். இருப்பினும் கை குழந்தையுடன் திடீர் என பெண் ஒருவர் காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால்  அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.