தெலங்கானாவில் குடும்ப தகராறில் 19 வயது கர்ப்பிணி பெண்ணை கணவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

தெலங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டத்திலிருக்கும் கோருட்லா மண்டலத்தில் உள்ள மதாபூர் கிராமத்தில் ஹரிபாபு என்பவர் தனது 19 வயது மனைவி வைஷ்ணவியுடன் வசித்து வந்தார். வைஷ்ணவி 4 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். அதேசமயம் யூட்யூப் சேனல் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். அவரது கணவரான ஹரி பாபு அங்கிருக்கும் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார். 

இந்த தம்பதியினர் காதலித்து வந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டனர். அப்போது மதாபூரில் வசித்து வந்த அவர்கள் இருவருக்குமிடையே கடந்த சில நாட்களாக   அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளது. இதில் கருத்து வேறுபாடு உண்டாக வைஷ்ணவி மீது ஹரி பாபு கடும் கோபத்துடன் இருந்துள்ளார். இப்படியான நிலையில் நேற்று அதிகாலை வைஷ்ணவியை திடீரென ஹரி பாபு கத்தியால் குத்தியுள்ளார். நல்ல ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த வைஷ்ணவி இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. கத்திக்குத்தில் படுகாயமடைந்த அந்த பெண் இரத்த வெள்ளத்தில் அங்கேயே உயிரிழந்தார். 

Continues below advertisement

இதனிடையே ஹரி பாபு அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதற்கிடையில் பொழுது விடிந்ததும் வைஷ்ணவி வீட்டு கதவு திறந்து கிடப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு அவர் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வைஷ்ணவி உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து இருவரின் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தினர். தற்போது தலைமறைவாக உள்ள கணவன் ஹரி பாபுவை தேடும் பணி நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரி பாபுவும், வைஷ்ணவியும் இரு வீட்டார் சம்மதத்துடன் மிக பிரமாண்டமாக திருமணம் செய்துக் கொண்டனர். திருமணத்திற்கு பின் அவர்களின் குடும்ப வாழ்க்கை சுமூகமாக சென்று கொண்டிருப்பதாக இருவரின் குடும்பத்தினரும் நினைத்தனர். ஆனால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது தெரியாது என போலீசில் ஹரிபாபு, வைஷ்ணவி குடும்பத்தினர் கூறியதாக சொல்லப்படுகிறது. திங்கட்கிழமை இரவு கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதன் சத்தம் அக்கம் பக்கத்தில் கேட்டதாகவும் குடியிருப்புவாசிகள் கூறியுள்ளனர். 

தற்போது வைஷ்ணவி மற்றும் அவரது வயிற்றில் இருந்த கரு என இரண்டு உயிர்கள் அநியாயமாக இறந்தது அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.