ஆடி கிருத்திகையன்று ஏன் மீன் குழம்பு சமைத்தாய்? என மனைவியை இரும்புக்கம்பியால் தாக்கிய கணவர், போலீஸ் விசாரணைக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


 சென்னை கொரட்டூர் அக்ரஹாரம் மூன்றாவது தெருவினைச்சேர்ந்தவர் 40 வயதான குமார். பெயிண்டராக வேலை செய்து வரும் இவருக்கு துர்கா என்ற மனைவியும், மோகன் மற்றும் ஜூவா என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். நேற்று ஆடிக்கிருத்திகை என்பதால் வீட்டில் பூஜைகள் எல்லாம் செய்துவிட்டு வழக்கம் போல தன்னுடைய பணிக்கு சென்றுவிட்டார் குமார். ஆனால் குழந்தைகள் ஆசைப்படுகிறார்கள் என்பதால் வீட்டில் மீன் குழம்பு சமைத்துள்ளார் துர்கா. இந்நிலையில் தான் பணியினை முடித்துவிட்டு குடிப்போதையில் வீட்டிற்கு வந்துள்ளார்  குமார். அவருக்கு  மனைவி துர்கா இரவு உணவினை எடுத்து வைத்துள்ள பொழுது, அவரது தட்டில் மீன் குழம்பினைப்பார்த்ததும், இன்னைக்கு ஆடிக்கிருத்திகைன்னு உனக்கு தெரியாதா? எதுக்கு வீட்டில் மீன் குழம்பு சமைத்தாய் என்று கேட்டு வாக்குவாததத்தில் ஈடுபட்டுள்ளார். எப்பொழுதும் போல அப்பா , அம்மா சண்டைத்தானே என்று நினைத்து இவர்களது குழந்தைகள் பக்கத்தில் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டனர்.





இதனையடுத்து  குழந்தைகள் ஆசைப்பட்டதால் தான் மீன் குழம்பு செய்தேன் என்று துர்கா எவ்வளவோ கூறியும், குமார் மீண்டும் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையில் ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் அருகில் இருந்த கம்பியினை வைத்து மனைவி துர்காவினை பெயிண்டர் குமார் தாக்கியதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குமார், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப்போய் நின்றுள்ளனர். இதற்கிடையில் தான் உறவினர் வீட்டிற்கு சென்று குழந்தைகள் வீடு திரும்பிய நிலையில், துர்கா ரத்த வெள்ளத்தில் ஒருபுறமும்,  மறுபுறம் குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதைப்பார்த்த குழந்தைகள் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர். குழந்தைகளின் சத்தம் கேட்டு அங்கு வந்த உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர்.


இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் சடலமாக தொங்கிக் கொண்டிருந்த குமாரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கே.எம்.சி. அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலையில் படுகாயத்துடன் கிடந்த துர்காவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் கொரட்டூர் காவல்நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.





 இந்த விசாரணையில், மீன் குழம்பு வைத்தது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் இதில் ஆத்திரம் அடைந்த குமார் மனைவி துர்காவை அருகில் கிடந்த கம்பியால் தலையில் ஓங்கி அடித்ததாகவும், அதில் மயக்கமடைந்து கீழே விழுந்த அவரை இறந்துவிட்டதாக நினைத்து பயந்துபோன குமார், போலீசார் விசாரணைக்கு பயந்து தனது வேஷ்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.  மீன்குழம்பு வைப்பதில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


 


.