நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி அருகே  திருவள்ளுவர் தெருவில் வசித்து வருபவர் சுல்தான் பாதுஷா(32) - சித்திகா பானு (28) தம்பதியினர். கணவர் சுல்தான் பாதுஷா சூப் கடை வைத்து தொழில் செய்து வருகின்றனர்.. இந்த நிலையில் வியாபாரத்தில் போதிய வருமானம் இல்லாத காரணத்தால் நெல்லை கே.டி.சி நகர், மங்கம்மாள் சாலையை சேர்ந்த கந்தையா(43) என்பவரிடம் ரூபாய் 10,000 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார் சித்திகா பானு. இந்த கடனுக்காக சித்திகா பானு வாரம் ஆயிரம் ரூபாய் வட்டியுடன் பணம் செலுத்தி வந்துள்ளார். பின்னர் பண கஷ்டத்தில் இருக்கவே கடந்த 3 வாரமாக வட்டி பணத்தை செலுத்த முடியாத நிலையில் இருந்துள்ளார்.


மேலும் சித்திகா பானு வள்ளியூரில் உள்ள ஒரு தனியார் துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். 3 வாரமாக  வட்டி பணம் செலுத்தாத நிலையில் கந்தையா என்பவர் துணிக்கடைக்கு சென்று சித்திகா பானுவிடம் நேரில் சென்று மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. அதன் பின்னர் கடந்த 16 ஆம் தேதி சித்திகாவையும் அவருடைய தாயாரையும் அவதூறாக பேசி மிரட்டிய கந்தையா அவருடைய வாகனத்தில் கடத்திச் சென்றுள்ளார். பின் சித்திகாவின் கணவரான சுல்தான் பாதுஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாங்கிய கடனை திரும்பி தந்த பின்பு தான் சித்திகாவையும் அவருடைய தாயாரையும் விடுவதாக கூறி கந்தையா மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.



இதனால் மனமுடைந்த சுல்தான் பாதுஷா, வீட்டில் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். தொடர்ந்து விஷமருந்திய அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அறிந்த கந்தையா சித்திகாவையும் அவருடைய தாயாரையும் 17 - ம் தேதி அன்று வீட்டிற்கு திருப்பி அனுப்பியுள்ளார். இதுகுறித்து சித்திகா பானு மூலக்கரைப்பட்டி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அவர் அளித்த  புகாரின் அடிப்படையில் நாங்குநேரி இன்ஸ்பெக்டர் செல்வி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார். விசாரணையின் பேரில் சித்திகாவை கடத்திச்சென்று மிரட்டல் விடுத்த கந்தையாவை கைது செய்ததோடு அவர் கடத்தலுக்கு பயன்படுத்திய நான்கு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தார். ஏற்கனவே கந்தையா மீது ஒரு கந்துவட்டி வழக்கு உட்பட மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கந்து வட்டி கொடுமை தொடர்பான நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அதில் சிக்கி தவிக்கும் பல்வேறு குடும்பங்கள் தங்களது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.  எனவே கந்துவட்டி கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியுள்ள நிலையில் வட்டி பணத்திற்காக இரண்டு பெண்களை கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண