திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவரது மனைவி வசந்தகுமாரி. இவர்களுடைய மகன் நரசிம்மராஜ் (வயது37). இவருக்கும், திருவானைக்காவல் கீழகொண்டையம்பேட்டையை சேர்ந்த கோபிநாத்-நாகவள்ளி தம்பதியின் மகள் சிவரஞ்சனிக்கும் (28) கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு பிரதிக் ஷா(10), லக் ஷா (7) என 2 மகள்கள் உள்ளனர். டிரைவரான நரசிம்மராஜ் ஆட்டோ ஓட்டி வந்தார். அதில் போதிய வருமானம் கிடைக்காததால் சிரமப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நரசிம்மராஜ் சமயபுரம் பகுதியில் உள்ள தனது வீட்டை விற்றுவிட்டு, நெ.1 டோல்கேட் அருகே தாளக்குடி ஊராட்சியில் சாய்நகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனது தாய், மனைவி மற்றும் மகள்களுடன் வசித்து வந்தார். மேலும் வீடு விற்ற பணத்தில் நரசிம்மராஜ் தனக்கிருந்த கடனை அடைத்துவிட்டு, ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் சிவரஞ்சனியின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். மேலும் புதிதாக தொழில் தொடங்குவதாக மனைவியிடம் கூறி, வீடு விற்ற பணத்தில் மீதமிருந்த ஒரு பெரிய தொகையை அவர் வைத்திருந்ததாக தெரிகிறது. 3 மாதங்கள் கடந்த பின்னரும் நரசிம்மராஜ் வேலைக்கு செல்லாமலும், புதிய தொழில் தொடங்காமலும் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் அவர் தொழில் தொடங்க எடுத்துக்கொண்ட பணம் குறித்து சிவரஞ்சனி கேட்டுள்ளார். அப்போது அவர், அந்த பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் அந்த பணம் வராததால், இது தொடர்பாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.




இந்நிலையில் கடந்த 4-ந் தேதி சிவரஞ்சனியின் அக்கா சசிகலா, செல்போனில் சிவரஞ்சனி மற்றும் நரசிம்மராஜை தொடர்பு கொண்டபோது அவர்களது செல்போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் அவர் மறுநாள் சிவரஞ்சனியின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. அவர்கள் கோவிலுக்கு சென்றிருப்பார்கள் என்று நினைத்து, சசிகலா திரும்பி சென்றுள்ளார். இருப்பினும் நேற்றுவரை அவர்களை செல்போனில் தொடர்பு கொள்ள முடியாததால் சசிகலாவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள நரசிம்மராஜின் சகோதரியை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது எதிர்முனையில் சிவரஞ்சனியின் மகள் பிரதிக் ஷா பேசியிருக்கிறார். அவள், தாய் சிவரஞ்சனிக்கு கொரோனா தொற்று இருப்பதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தந்தை நரசிம்மராஜ் கூறி, தன்னை அத்தை வீட்டில் விட்டு சென்றுவிட்டதாக கூறியிருக்கிறார்


இதனால் மேலும் சந்தேகமடைந்த சசிகலா, சிவரஞ்சனியின் வீட்டிற்கு சென்று கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு படுக்கை அறையில் உள்ள மஞ்சள் பூசிய நிலையில் கட்டிலுக்கு அடியில் பிளாஸ்டிக் பையில் சுருட்டி வைக்கப்பட்ட நிலையில் சிவரஞ்சனி பிணமாக உடல் அழுகி இருந்ததை கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார். மேலும் இதுகுறித்து கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிவரஞ்சனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.


இதனை தொடர்ந்து காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில், பணம் சம்பந்தமாக கணவன்-மனைவிக்கு இடையே கடந்த 3-ந் தேதி நள்ளிரவு ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த நரசிம்மராஜ், சிவரஞ்சனியை கத்தியால் குத்தியதில் அவர் இறந்துள்ளார். இதனைத்தொடர்ந்து சிவரஞ்சனி அணிந்திருந்த நகைகளையும், வீட்டில் பீரோவில் இருந்த நகைகளையும் எடுத்துக்கொண்ட அவர், பின்னர் சிவரஞ்சனியின் உடல் மீது மஞ்சள் பொடியை பூசி, பின்னர் ஒரு பிளாஸ்டிக் பையில் மூட்டை கட்டுவது போன்று சுருட்டி படுக்கை அறையில் இருந்த கட்டிலுக்கு அடியில் உடலை மறைத்து வைத்துவிட்டு மகள்களையும், தாய் வசந்தகுமாரியையும் அழைத்துக்கொண்டு தப்பிச்சென்றது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மகள்கள் மட்டும் ஆந்திராவில் இருக்கும் நிலையில், நரசிம்மராஜும், அவரது தாய் வசந்தகுமாரியும் தலைமறைவாக உள்ளதால், இந்த கொலையை தாயும், மகனும் திட்டமிட்டு செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் தலைமறைவாக உள்ள நரசிம்மராஜ் பிடிபட்டால் மட்டுமே கொலை எவ்வாறு நடந்தது? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து முழு விவரங்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள தாய், மகனை தேடி வருகின்றனர். பெண் கொலை செய்யப்பட்டு உடல் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.