வெளிநாடுகளுக்கு வேலைக்காகவும், படிப்பிற்காகவும் பலரும் தங்களது நாடுகளில் இருந்து செல்வது வழக்கம். இந்தியாவில் இருந்தும் லட்சக்கணக்கானோர் ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்கு படிப்பிற்காகவும், வேலைக்காகவும் செல்கின்றனர். அரசு வகுத்துள்ள விதிகளின்படி அனைவரும் சென்றாலும், சிலர் சட்டவிரோதமாக பல நாடுகளுக்கு ஊடுருவி வருகின்றனர்.


அமெரிக்கா செல்ல ஆசைப்பட்ட இந்தியர்கள்:


இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு லட்சக்கணக்கானோர் வேலைக்காகவும், படிப்பிற்காகவும் சென்று வருகின்றனர். இந்த நிலையில், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சிலர் அமெரிக்காவிற்கு செல்ல முடிவு செய்துள்ளனர். அங்கு சென்று வேலை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளனர். இதையடுத்து, அவர்கள் அந்த பகுதியில் உள்ள வெளிநாடு அழைத்துச் செல்லும் ஏஜெண்டுகளை அணுகியுள்ளனர்.


அந்த ஏஜெண்டுகளிடம் இருந்து ரூபாய் 45 லட்சம் வரை பணம் வாங்கியுள்ளனர். பின்னர், அவர்களை அமெரிக்காவிற்கு அனுப்புவதாக கூறியுள்ளனர். பின்னர், அவர்களை நேபாளம் வழியாக அமெரிக்கா அழைத்துச் செல்வதாக கூறியுள்ளனர். பின்னர், அவர்களை நேபாள நாட்டின் காத்மாண்டுவிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.


ஆள் கடத்தல்:


அங்கு ஒரு வீட்டில் அவர்களை தங்க வைத்துள்ளனர். அந்த வீட்டில் இருந்து வெளியே செல்லவும் அவர்களை அழைத்துச் சென்றவர்கள் அனுமதிக்கவில்லை. ஒரு மாத காலமாகியும் அவர்களை அந்த கும்பல் வெளியில் விடாமல் அடைத்து வைத்துள்ளது. அப்போதுதான் தாங்கள் ஆள் கடத்தல் கும்பலால் கடத்தப்பட்டு இருந்ததை அவர்கள் அறிந்தனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க அவர்கள் முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை.


பின்னர், இதுதொடர்பாக தகவல் அறிந்து அந்த நாட்டு காவல்துறையினர் காத்மாண்டில் உள்ள ரதோபுல் பகுதியில் இருந்த வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த 11 இந்தியர்களையும் மீட்டனர். மீட்கப்பட்ட அனைவரும் ஆண்கள் ஆவார்கள்.


மீட்கப்பட்ட இந்தியர்கள்:


இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஏஜெண்டுகள் 7 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அந்த போலி ஏஜெண்டு வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்வதாக ஏமாற்றி ஆள்கடத்தலில் ஈடுபட்டு வந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. நேபாளத்தில் மீட்கப்பட்ட இந்தியர்களை நாட்டுக்கு அழைத்து வரும் பணியில் அதிகாரிகளும் போலீசாரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


மேலும், இந்த ஆள்கடத்தலில் யாருக்கு தொடர்பு இருக்கிறது? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? யார்? என்ற விசாரணையிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். வெளிநாடு செல்ல நினைத்த இந்தியர்களை போலி ஏஜெண்டுகள் கடத்த முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.