ஆன்லைன் செயலியில் முதலீடு செய்தால், வேலை செய்யாமலேயே பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் பல ஆயிரம் ரூபாய்களை முதலீடு செய்ததாகவும், தங்களின் பணத்தினை சுருட்டிக்கொண்டு சென்றுவிட்டதாக தமிழகத்தில்  பல்வேறு புகார்கள் தற்பொழுது எழுந்து வருகிறது.


தமிழ்நாட்டில் ஆன்லைனில் சூதாட்டம், விளையாட்டு என பலவற்றில் ஈடுபட்டு மக்கள் பலர் விரக்தியில் உயிரிழக்கும் நிலையினை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். ஆனால் இன்னமும் திருந்தியப்பாடில்லை என்று தான் கூற வேண்டும். மக்களின் மனநிலைக்கு ஏற்றவாறும், தொழில்நுட்ப மாறுதல்களுக்கு ஏற்ப மோசடி செய்யும் விதத்தினையும் மாற்றி வருகின்றனர். அப்படித்தான் வேலைக்கு செல்லாமலே மாத வருமானம் கிடைக்கும் என்பது போன்ற ஆசை வார்த்தைக்களை கூறி நடைபெறும் டிராகன் மோசடி தமிழகத்தில் அதிகரிக்கத்தொடங்கிவிட்டது. 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் தினமும் அதில் வரும் லாபத்தில் 60 சதவீத்தினை நீங்களே பெற்றுக்காள்ளலாம் எனவும் மோசடி கும்பல் தெரிவித்துள்ளனர். இந்த பேச்சினைக்கேட்டு  நம்பி மக்கள் பலர் 10 ஆயிரம் ரூபாய் வரை முதலீடு செய்கின்றனர். இதன் மூலம் முதல் மாதத்தில் மட்டும் லாபத்தினை காட்டி விட்டு அடுத்த மாதத்தில் மொத்த பணத்தினையும் சுருட்டி விட்டு ஓடிவிடுகின்றனர் மோசடி கும்பல்கள்…




இப்படிப்பட்ட சூழலில், மோசடி கும்பல் எப்படி மக்களை ஏமாற்றுகிறது? எப்படி பாதுகாப்பாக நாம் இருக்க வேண்டும் என்பதனை மக்கள் அனைவம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்.. கொரோனா காலக்கட்டத்தில் வேலையில்லாமல், என்ன செய்வது என்று பலர் வழி தெரியாமல் இருந்தனர். மேலும் ஒரு கம்பெனியில் வேலைப்பார்த்தாலும் செலவிற்கு இன்னமும் பணம் தேவைப்படும் என்ற ஆசையில் பலர் இருப்பார்கள். இவர்களை எல்லாம் முதலில் குறி வைத்துத் தான் இந்த டிராகன் மோசடி ஏற்படுகிறது. இதற்காக லக்கி ஸ்டார் மற்றும் ஜெனிசிஸ் என்ற இரண்டு ஆன்லைன் செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனவும், அதில் நீங்கள் முதலீட்டு பணத்தினை செலுத்த வேண்டும் என மோசடி கும்பல் கூறுகிறது. இதனையடுத்து இந்தப் பணத்தினை ஆன்லைன் லாட்டரி மற்றும் விளையாட்டுகளில் செலுத்தி அதில் வரும் லாபத்தில் 60 சதவீதத்தினை உங்களுக்கே வழங்குவோம் என மோசடி கும்பல் தெரிவித்து வருகிறது. குறிப்பாக 10 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் தினமும் 10 ஆயிரம் கிடைக்கும் எனவும் அதில் 600 ரூபாயினை உங்களுக்கே கொடுத்து விடுகிறோம் என தெரிவித்து வருகின்றனர்..


மேலும் செயலியின் உதவியோடு நாம் எவ்வளவு பணம் லாபத்தினைப்பெற்று வருகிறோம் என அனைத்து விபரங்களுடன் வெளிப்படையாக செயல்படுவது போன்று காட்டிக்கொள்கிறது. இதோடு உங்களது பணத்தினை திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே எடுக்க வேண்டும் என்ற நிபந்தனைகளையும் வைத்துள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த வாலட்டில் இருந்து பணத்தினை டிரான்ஸ்பர் செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளது. இப்படி சில மாதங்கள் மக்களுக்கு லாபத்தினை காட்டிவிட்டு ஒரு நாள் அக்கவுண்டில் இருக்கும் மொத்த பணத்தினையும் சுருட்டிவிட்டு சென்றுவிடுகின்றனர். செயலினை ஓபன் செய்துப்பார்த்தால் டிராகன் படம் மட்டும் தான் தெரியவரும். பின்னர் வாட்ஸ் அப் வாயிலாக மோசடி கும்பலில் பேசும் பொழுது, டிராகன் ஹேக்கர்களால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுவிட்டதாகக் கூறும் அவர்கள் மொத்தப் பணத்தினை செலுத்தினால் மட்டுமே இதுவரை கட்டியுள்ளப் பணத்தினை நீங்கள் பெற முடியும் என கூறுகின்றது.





இதுபோன்ற புகார்களோடு தற்பொழுது ஏமாற்றம் அடைந்த மக்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வருவது அதிகமாகி வருகிறது. இதுத்தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், தமிழகம் முழுவதும் இதுவரை 300க்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் குழுக்களை அமைத்துள்ளதோடு, செயலிகளில் முதலீடு செய்த பணம் கோடிக்கணக்கில் இருப்பதைக் கண்டறிந்தனர். இதனையடுத்து யார் அந்த கும்பல்? என்று தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும், சில மாதங்களுக்கு முன்பு, சீன கும்பல் கடன் செயலி மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இந்த மோசடியும் டிராகனைப் பயன்படுத்தி நடப்பதால் இதுவும் சீன கும்பலாக இருக்குமோ? என்ற சந்தேகத்தில் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.