ஆன்லைன் மோசடி.. ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த கேபிள் டிவி ஆபரேட்டர் தற்கொலை... ஆன்லைன் ரம்மி விளையாடிய வங்கி ஊழியர் குடும்பத்துடன் தற்கொலை.... இப்படியான செய்திகளை தினம் தினம் கடக்க தொடங்கிவிட்டோம். இவற்றின் பின்னணியில் இருக்கும் ஆபத்துக்கள் என்ன? எப்படி செயல்படுகிறது இந்த நிறுவனங்கள்? ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இருக்கும் பின்னணி என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
கொரோனா ஊரடங்கு காலகட்டம் டிஜிட்டல் ஊடகங்கள் மீதான நாட்டம் மற்றும் அவற்றின் பங்களிப்பை அதிகரிக்க தொடங்கிவிட்டது. பெருந்தொற்று சமயங்களில் வேலை இழந்த பலரும் தங்களின் வருமான நோக்கத்திற்காக யூடியூப் பக்கம் தலை சாய்க்க தொடங்கினர். இது ஒரு வகையில் ஆரோக்கியமான விஷயமாக பார்க்கப்பட்டாலும் இன்னும் சிலரோ ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி , பணத்தை பறிகொடுத்து இறுதியில் உயிரை இழக்கவும் துணிந்துவிடுகின்றனர். குறிப்பாக ஒரு விளையாட்டை சொல்ல வேண்டுமானால் ஆன்லைன் ரம்மி.
ஆன்லைன் ரம்மி :
தமிழகத்தில் சூதாட்டம் தடை செய்யப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் இணையத்தில் இவ்வகை சூதாட்டத்தை விளையாட ஏகப்பட்ட தளங்களும் , செயலிகளும் கொட்டிக்கிடக்கின்றன. ரம்மி என்ற பொது பெயரில் அழைக்கப்படும் இவ்வகை சூதாட்ட விளையாட்டை குறிப்பிடும்பொழுது Gambling என்றுதானே கூற வேண்டும் . ஆனால் நிறுவனங்கள் இவற்றை Skill Based Games என்றுதான் கூறுகின்றன. அதாவது திறமையாக விளையாடக்கூடிய விளையாட்டுகள் பட்டியலில் இணைத்துள்ளன.
எப்படி செயல்படுகிறது ?
பொதுவாக இது போன்ற விளையாட்டுகள் அனைத்துமே Random Number Generator என்னும் கோட்பாட்டை அடிப்படையாக கொண்டது. ராண்டம் நம்பர்ஸ் என்பது கணினி வன்பொருள் மூலமாகவோ அல்லது மென்பொருள் அல்காரிதம் மூலமாகவோ தன்னிச்சையாக செயல்பட்டு , வரம்பற்ற எண்களில் இருந்து சில குறிப்பிட்ட எண்களை உருவாக்கி அதனை பயனாளருக்கு கொடுக்கும். இவ்வகை தொழில்நுட்பம் மாணவர்களின் தேர்வு எண்களை உருவாக்குவதில் கூட பயன்படுத்தப்படுகிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பயன்படுத்தப்படும் இவ்வகை Random Number Generator இரண்டு வகையாக பிரிக்கபடுகிறது.ஒன்று போலி (Pseudo Random Number Generators) , மற்றொன்று உண்மை (True Random Number Generators).
போலி ரேண்டம் ரம்பர் ஜெனரேட்டர் முன்பே கணக்கிடப்பட்டதாக இருக்கும்.அதாவது இந்த ரேண்டம் நம்பர்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட விளையாட்டுகளில் வெற்றியாளர்கள் யார் என்பது முன்பே நிர்ணயிக்கப்பட்ட பிறகுதான் விளையாட்டே தொடங்கும். மேலும் அவற்றை கட்டுப்படுத்தலாம் என்கின்றனர். ஆனால் உண்மை ரேண்டம் நம்பர் ஜெனரேட்டர் முற்றிலும் கணித சூத்திரம் என்னும் அல்காரிதம் மூலம் கிடைக்கும் எண்கள். இதனை முன்பே கணக்கிட முடியாது.மேலும் இதனை பயன்படுத்தி விளையாட்டுகளை உருவாக்குவதற்கான பொருட்செலவு அதிகமாம். மேலே குறிப்பிட்ட இந்த இருவகை ரேண்டம் நம்பர்ஸ் தியேரியை அடிப்படையாக கொண்டுதான் , இது போன்ற ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள் உருவாக்கப்படுகின்றன.
இதில் எது உண்மையான ரேண்டம் நம்பர்ஸ் தியேரியின் அடிப்படையின் மூலம் உருவாக்கப்படுகிறது என்பதை சாதாரண பயனாளர்களால் எப்படி அறிந்துகொள்ள முடியும். இவை முறையாக செயல்படுகின்றனவா என்பதை கண்காணிக்கத்தான் ஆன்லைன் ரம்மி பெடரேஷன் என்ற அமைப்பு உள்ளது. ஆனாலும் அவற்றில் முன்னணி ரம்மி விளையாட்டு நிறுவனங்கள்தான் முக்கிய பொறுப்பில் இருக்கின்றன.
வணிக நோக்கம் :
பொதுவாக ரம்மி ஆன்லைன் கேம் நிறுவனங்கள் இரண்டு வகையில் செயல்படுகின்றன. ஒன்று சிறு நிறுவனங்கள் மற்றொன்று பெரு நிறுவனங்கள் . சிறு நிறுவனங்கள் இணையத்தில் கிடைக்கும் இலவச அல்லது குறைந்த தொகையின் மூலம் கிடைக்கும் ஆன்லைன் ரம்மி விளையாட்டை உருவாக்குவதற்கான கோடிங்ஸை பெற்றுக்கொண்டு, அதன் மூலம் செயலியை உருவாக்கி பயனாளர்களின் விவரங்கள் மற்றும் விளம்பரங்கள் மூலமாக பணத்தை ஈட்டுகின்றனர்.
மற்றொன்று பெருநிறுவனங்கள் அதாவது இப்படியான விளையாட்டுகளை உருவாக்குவதற்காகவே செயல்படும் ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள். இவ்வகை நிறுவனங்கள் மிகுந்த நுணுக்கமான தொழில்நுட்ப வேலைப்பாடுகளுடன் பயனாளர்களை தன்வசப்படுத்த தேவையான அனைத்து யுக்திகளையும் மறைமுகமாக கையாளுகின்றன. ஆன்லைன் விளையாட்டை பிரபலப்படுத்த இவ்வகை நிறுவனங்கள் வழக்கத்தை விட அதிக விளம்பர தொகையை யூடியூப் முதல் தொலைக்காட்சி ஊடகங்கள் வரை செலவிடுகின்றன. பயனாளர் ஒருவர் முதன் முதலில் ஆன்லைன் ரம்மியை விளையாட துவங்கும் பொழுது , பயனாளர்களை ஈர்க்கவும் அவர்களை தன்வசப்படுத்தவும் அவர்களை தொடர்ந்து வெற்றியாளர்களாக முன்னிலை படுத்த போலி ராண்டம் நம்பர்ஸை பயன்படுத்துகின்றன. அடுத்ததாக பயனாளர் அடுத்த விளையாட்டை எவ்வளவு நேரத்தில் விளையாடுகிறார், எவ்வளவு மணி நேரம் விளையாடுகிறார் என்பதை அடிப்படையாக கொண்டு அவர் விளையாட்டிற்கு காட்டு தீவிரம் கணக்கிடப்படுகிறது.
சிம்பிளாக சொல்லப்போனால் விளையாடும் நபர் நமது விளையாட்டிற்கு அடிமையாகிவிட்டார் என்பதை புரிந்துகொள்ளும். அதன் பிறகு தொடர்ந்து 6 விளையாட்டில் தோற்றால் ஒரு விளையாட்டில் வெற்றி பெறுவார். அதன் பிறகு 2 விளையாட்டில் வெற்றி பெற்றால் அடுத்து 4 விளையாட்டில் தோல்வியுறுவார். இப்படியாக தங்களின் பணத்தை முழுவதுமாக ஆன்லைன் நிறுவனங்களுக்கு தாரை வார்த்து விட்டு , கூடுதலாக கடன் பெற்றும் விளையாடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதில் சோகம் என்னவென்றால் கடன் பிரச்சனை , உளவியல் பிரச்சனை என இரண்டிலும் சிக்கு , விலை மதிக்க முடியாத உயிரை மாய்த்துக்கொள்கின்றனர்.
இப்படியான ஆன்லைன் விளையாட்டில் சிக்கி , தற்கொலை வரையிலும் செல்லும் பரிதாப நிலை தீவிரமாகிக்கொண்டிருக்கிறது. இதனை தடுக்கவும் அவர்களை மீட்டெடுக்கவும் மனநல ஆலோசனை தீர்வாக அமையும் என்கின்றனர் மருத்துவர்கள்.