ஸ்ரீபெரும்புதூரில் துப்பாக்கி முனையில் பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையர்களை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்திய போலிஸார், கொள்ளையர்களில் ஒருவனை இன்று என்கவுன்டர் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அருகே பென்னலூர் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன். விவசாயி கூலி வேலை செய்து வருகிறார். இவரது முதல் மனைவி இறந்து விட்டதால், இந்திராணி(58) மறுமணம் செய்து கொண்டார். இவர், நேற்று, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது சகோதரியை பார்க்க, சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலை பென்னலூர் ஈபி பஸ் நிறுத்தத்தில் காலை 8.30 மணிக்கு பேருந்துக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது, இரண்டு வடமாநில இளைஞர்கள் இந்திராவிடம் முகவரி கேட்பதுபோல் நைசாக பேச்சு கொடுத்துள்ளனர்.




அப்போது இந்தி, தமிழ் என மாறிமாறி பேசியுள்ளனர். அதில், ஒருவன் இந்திரா கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளான். சுதாரித்துக்கொண்ட இந்திரா செயினை கையில் பிடித்துக் கொண்டு மர்ம நபர்களிடம் போராடி உள்ளார். மேலும், இந்திரா கூச்சலிட்டதால், அதில் ஒருவன் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டுள்ளான். இதனால், அதிர்ச்சி அடைந்த இந்திரா திகைத்து நின்றுள்ளார். பின்னர், இந்திரா கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு இருங்காட்டுக்கோட்டை ஏரியை நோக்கி தப்பி ஓடி உள்ளனர்.


பின்னர், இந்திரா கூச்சலிட, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்திவிட்டு இந்திராவிடம் விசாரித்துள்ளனர். பின்னர், தங்க சங்கிலி பறிப்பு சம்பவம் குறித்து அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பெரும்புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


 



போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, சம்பவம் நடந்த இடத்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட துப்பாக்கியின் தோட்டாக்கள் கீழே சிதறிக் கிடந்து உள்ளது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து காஞ்சிபுரம் எஸ்.பி., சுதாகர் மற்றும் போலீசார் சம்பவ வந்து விசாரணை நடத்தினர். இதில், 30 முதல் 35 வயதான வடமாநில இளைஞர்கள் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மர்ம நபர்கள், கடந்த 3 நாட்களாக அதே பகுதியில் சுற்றி திரிந்து வந்துள்ளனர் என்றும், விசாரணையில் தெரியவந்தது இதனையடுத்து காவல்துறையினர் ட்ரோன் கேமரா உதவியுடன் தேடி வந்தனர். 


இந்நிலையில் இன்று அதிகாலை  துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த கொள்ளையர்களில் ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மற்றொரு கொள்ளையனை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். என்கவுன்டரில் பலியான கொள்ளையன் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த முர்கஷா என்பது தெரியவந்துள்ளது. மேலும் ஏரியில் பதுங்கி இருந்த 2-வது கொள்ளையன் நைம் அக்தர் கைது செய்த போலீஸார் அவர்  அளித்த தகவலின் அடிப்படையில் மற்றொரு கொள்ளையன் முர்தஷாவை போலீஸார் தேடி வருகின்றனர்.




குற்றவாளியை பிடிக்க முயன்ற பொழுது,  குற்றவாளி தாக்கியதால் இரண்டு காவலர்களுக்கு பல்வேறு இடங்களில் வெட்டு. தற்போது ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமை காவலர் மோகன்தாஸ் மற்றும் மற்றொரு காவலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.