செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் அடுத்த கொளத்தூர் பகுதியில் வசித்து வரும் கூலித் தொழிலாளி எல்லப்பன். இவருக்கு ரேகா வயது 22 என்ற பெண் உள்ளார் . இந்தப்பெண் மறைமலைநகரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ரேகாவிற்கும் அதே தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் அரியலூர் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அடிக்கடி சதீஷ் தங்கியுள்ள தனியறையில் இருவரும் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து ரேகா கர்ப்பமாகியுள்ளார். 




இதனை அறிந்த பெற்றோர்கள் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக ரேகாவை வேலைக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்துள்ளனர். தற்போது 8 மாதம் கர்ப்பிணியாக இருந்த நிலையில் நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவரது வீட்டிலேயே பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. பிரசவத்தின் போது குழந்தை இறந்து பிறந்ததால் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தொப்புள் கொடி முறையாக அறுத்துவிடாமல் ரேகாவிற்கு தொடர்ந்து ரத்தப்போக்கு இருந்து வந்துள்ளது .

 

பின்னர் இறந்த நிலையில் இருந்த குழந்தையை ரேகாவின் பெற்றோர்கள் ஒரு வாளியில் துணியால் சுற்றி கழிவறையில் யாருக்கும் தெரியாமல் மூடி வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ரேகாவை அருகிலிருந்த சிங்கப்பெருமாள் கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அப்போது செல்லும் வழியில் ரேகா உயிரிழந்துள்ளார்.



 மேலும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றது ரேகாவிற்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டதாகவும் அதனால் மருத்துவமனைக்கு வரும் செல்லும் வழியில் இறந்துவிட்டதாக ரேகாவின் பெற்றோர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவர்களிடம் மாற்றி கூறியுள்ளனர். அப்போது சந்தேகமடைந்து பரிசோதித்த மருத்துவர்கள் ரேகாவிற்கு பிரசவம் ஆனதை உறுதிப்படுத்தியுள்ளனர். பின்னர் மருத்துவமனை சார்பில் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 



அப்பகுதிக்கு சென்று போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தை ஒன்று இறந்த நிலையில் கழிவரையில் வாளியில் துணியால் சுற்றி மறைத்து வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அரியலூர்  உள்ள சதீஷிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னுக்குப் முரணான தகவலை தெரிவித்ததால் பெற்றோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரேகாவின் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பது உடல் கூறு ஆய்வுக்கு பிறகே தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் யாருடைய குழந்தை என்பதை உறுதிப்படுத்த டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



இதுகுறித்து ரேகாவின் பெற்றோர்களிடமும் அவரது உறவினர்களிடமும் பாலூர் காவல் நிலைய போலீசார் ரேகாவின் மரணம் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.