மதுரையில் உடன் பணியாற்றிய ஆசிரியைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தலைமை ஆசிரியர் ஒருவர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

மதுரை கீரைத்துறை பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் ஜெயசீலன். அப்பகுதியிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தார். சில மாதத்திற்கு முன்பு இந்த பள்ளிக்கு வேறொரு அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்து பணிநிரவல் மூலம் இரண்டு ஆசிரியைகள் மாறுதலாகி வந்தனர். அவர்கள் பள்ளி அலுவல், மாணவர்களுக்கான தேவை தொடர்பாக தலைமை ஆசிரியரை அணுகியபோது, அவர்களிடம் தவறான வகையில் பழக ஜெயசீலன் முயற்சித்ததாக கூறப்படுகிறது. அதனை இரண்டு ஆசிரியைகளும் கண்டித்து, அவரை எச்சரித்துள்ளனர்.

 

ஆனாலும், அவர் நிலைப்பாடு மாறவில்லை என்பதால் வேறு வழியின்றி இரண்டு ஆசிரியைகளும் பணி மாறுதல் கேட்டு மதுரை மாவட்ட கல்வித்துறை அதிகாரியிடம் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு முறைப்படியான மாறுதல் உத்தரவு கிடைத்தும், இருவரையும் பணியில் இருந்து விடுவிக்காமல் ஜெயசீலன் தாமதம் செய்துள்ளார். இதற்கிடையில் இரண்டு ஆசிரியைகளில் ஒருவர் கடந்த 2 மாதத்திற்கு முன்பு, ஜெயசீலனுக்கு எதிராக மதுரைநகர் மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தார். இது பற்றி தெரிந்த ஜெயசீலன், முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை அணுகினார். அவரது மனுவை தள்ளுபடி செய்து மதுரைக்கிளை உத்தரவிட்டது.

 

இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஜெயசீலனை காவல் துணை ஆணையர் தங்கத்துரை தலைமையிலான தனிப்படையினர் தொடர்ந்து தேடிவந்தனர். அவரது செல்போன் சிக்னல் மூலம் கண்காணித்தனர். கோவை அவினாசி பகுதியில் அவர் பதுங்கி இருப்பது தெரிந்த போலீசார் அங்கு சென்றனர். இருப்பினும், அவர் மதுரைக்கு தப்பி வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து மதுரை மகால் பகுதியிலுள்ள பந்தடி தெருவில் ஒரு வீட்டில் பதுக்கியிருந்த ஜெயசீலனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

 



மதுரை மேலூரில் சிறுமியை திருமணம் செய்த பெண் மற்றும் அவருக்கு உதவிய பெண் என 2 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.








 

மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. கீழவளவு அருகில் உள்ள கரியாபட்டியைச் சேர்ந்தவர் சகிதா பேகம். சிறுமியின் உறவினரான இவர், ஜவுளிக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். சகிதா பேகம், கணவரை பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில், சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி சென்ற அவர், பெற்றோர் வீட்டில் இல்லாதபோது, தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் ரீதியாகப் பழகி இருக்கிறார். சிறுமிக்கு மொபைல் போன் வாங்கிக் கொடுத்துள்ளார்.

 

இது குறித்து சிறுமியின் பெற்றோர் கேட்டபோதுதான், சகிதா பேகத்துடன் பழகுவது தெரிய வந்தது. இதற்கிடையில் உறவினர் வகிதா பானு என்பவரின் உதவியோடு, சிறுமியை சகிதா பேகம் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி திருமணம் செய்துள்ளார். பின்னர் மேலூரில் உள்ள தங்கும் விடுதியில் சிறுமியுடன் குடும்பம் நடத்தியதாகக் கூறப்படுகிறது.தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் மேலூர் மகளிர் போலீஸில் புகார் அளித்ததன் பேரில் போக்ஸோ சட்டம் மற்றும் குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல் ஆய்வாளர் ரமாராணி வழக்குப் பதிவு செய்து சகிதாபேகம், வகிதா பானு ஆகியோரை கைது செய்தனர்.