குட்கா தடை விதித்து, சட்டங்களை கடுமையாக்கி, எங்கு பார்த்தாலும் குட்காவிற்கு எதிரான தேடுதல் வேட்டை எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது தமிழ்நாட்டில். ஆனாலும், இந்தியாவின் ஏதோ ஒரு மூளையிலிருந்து தினமும் குட்கா சப்ளை நடந்து கொண்டு தான் இருக்கிறது. போலீஸ் சிலவற்றை பிடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனாலும் குட்கா முடிவுக்கு வரவில்லை.

வடமாநிலங்களில் குட்கா பிரதானம் என்றாலும், இங்கு அது அருவெருப்பு பொருள் தான். கேன்சர் உள்ளிட்ட தீய நோய்களுக்கு துணை போகும் என்பதால், குட்காவை முற்றிலும் ஒழிக்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. 

குட்கா வேட்டை மாவட்ட வாரியாக நடந்து கொண்டிருக்கிறது. ரயில், பஸ் என தேடுதல் வேட்டை முழு வெறியோடு நடந்து கொண்டிருக்க, வீடு தேடி வந்து விட்டது குட்கா சேல். ஆமாம், டில்லி வாசி எனக்கூறிக்கொள்ளும் ஒரு நபர், பேஸ்புக்கில் குட்கா பொருட்களை ஆர்டரின் பெயரில் விற்றுக் கொண்டிருக்கிறார். அதுவும் 10 சதவீதம் விலை தள்ளுபடியோடு. 



‛குப்தா குமார்’ என்கிற பெயரில் உள்ள அந்த பேஸ்புக் முகவரியில், குட்கா விற்பனை தொடர்பான முன்பதிவு விபரங்கள் உள்ளன. புக் செய்தால், சிறிது நேரத்தில் நம்மை தேடி குட்கா வருகிறதாம். அந்த அளவிற்கு அது பரந்து விரிந்த நெட்வொர்க் எனத் தெரிகிறது. இருப்பிடமாக டெல்லியை குறிப்பிட்டிருந்தாலும், மதுரைக்கு கூட டெலிவரி தருகிறார்கள் என்கிறது அந்த பேஸ்புக் விபரம். இதில் விசேசம் என்னவென்றால், நேற்று தான் அந்த பேஸ்புக் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. தொடங்கியதிலிருந்தே ஆர்டர்கள் குவிகிறதாம்.  



 

5.25 ரூபாய்க்கு விற்கப்படும் சூப்பர் பவர் குட்கா, 10 சதவீத தள்ளுபடியுடன் 4.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என அதில் ஆப்ஷன் வேறு வைத்திருக்கிறார். பெட்டிக் கடைகளில் மறைத்து விற்கப்படும் குட்காவின் விலை 15 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது. அப்படி பார்க்கும் போது, இது ஒரு மலிவு விலை குட்கா என்பதால் மொத்த வியாபாரிகள் பலரும் ஆர்டர்களை தரத்தொடங்கிவிட்டனராம். தமிழ்நாடு போலீசாருக்கு புதிய வடிவில் வந்திருக்கும் இந்த ஆன்லைவ் குட்கா விற்பனை, எங்கு கொண்டு போய் நிறுத்துமோ!