குஜராத் கடலோர பகுதியில் ரூ.600 கோடி மதிப்புடைய போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில், போதை பொருள் கடத்திய பாகிஸ்தானியர் 14 பேரை, இந்திய கடலோர காவல்படை கைது செய்தது.
போதைப்பொருள் கடத்தல்:
இந்தியாவில் போதைப்பொருளின் பயன்பாடானது, சற்று அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தியாவுக்கு போதைப்பொருட்கள் பெரும்பாலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றன.
image credits:@ ANI
போதைப்பொருள் கடத்தலானது, வெளிநாடுகளிலிருந்து கடல்வழி போக்குவரத்தின் மூலம் அதிகமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக குஜராத் கடல் எல்லை பகுதியானது, போதைப்பொருள் கடத்தலில் அவ்வப்போது செய்திகளில் வருவதை காண முடிகிறது. குஜராத் கடல் எல்லைப் பகுதியில் போதைப்பொருள் கடத்தல், அதிகமாக நடைபெறுவதற்கு முக்கிய காரணமாக, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள், இவ்வழியை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக தகவல் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானியர்கள் 14 பேர் கைது:
இந்நிலையில், குஜராத் கடலோர பகுதியில் இந்திய கடலோர காவல்படை சோதனை செய்ததில், ரூ.600 கோடி மதிப்புடைய போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில், போதை பொருள் கடத்திய பாகிஸ்தானியர் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஏ.என்.ஐ செய்தி முகமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்திய கடலோர காவல்படை ஏப்ரல் 28 அன்று கடலில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போதைப்பொருள் கடத்தல் குறித்து, இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, உளவுத்துறை கொடுத்த தகவல் அடிப்படையில் குஜராத் கடல் எல்லைப் பகுதியில் சோதனை நடவடிக்கையில் இறங்கியது.
அப்போது, பாகிஸ்தான் கப்பலில் இருந்து 14 பணியாளர்களுடன் 600 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 86 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தியக் கடலோரக் காவல்படை (ஐசிஜி), பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்) மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (என்சிபி) ஆகியவை இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.