கடந்த சில ஆண்டுகளாக மறைந்த தலைவர்கள் மீது சமூக வலைதளமான முகநூல், டுவிட்டர்களிலும் யூ டியூப்பிலும் அவதூறு பரப்பும் போக்கு அதிகரித்து காணப்படுகிறது. இந்த வகையில், கடந்தாண்டுகளில் திராவிட இயக்கத் தலைவர்கள் மீது சிலர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்த நிலையில், மறைந்த முதல்வர் கருணாநிதி, அண்ணா மற்றுமு் பெரியார் மீது கிஷோர் கே சுவாமி என்பவர் சமூக வலைதளங்களிலும், யூ டியூப்பிலும் கடுமையாக விமர்சித்து வந்தார். மேலும், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றியும் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியிருந்தார்.
இந்த நிலையில், அவர் மீது காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் என்பவர் கடந்த ஜூன் 10-ந் தேதி புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் 153 கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு செயல்படுதல், 505(1) (b) அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக ஒரு குற்றத்தைச் செய்யத் தூண்டுதல், 505(1) (c) ஒவ்வொரு வகுப்பு அல்லது சமூகத்தை வேறு சமூகத்துக்கு எதிராக குற்றம் செய்யத் தூண்டுதல் என மூன்று பிரிவுகளின் கீழ் கிஷோர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்தது.
இதனையடுத்து, கிஷோர் கே சுவாமியை ஜூன் 28-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க, தாம்பரம் கிளை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, அவரை போலீசார் சைதாப்பேட்டை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிஷோர் கே சுவாமி மீது இன்று குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக கிஷோர் கே சுவாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களையும் மிகவும் இழிவாக பேசிவந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தருமபுரி எம்.பி.யை தரக்குறைவாக டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வரும் சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு “ சரளமாக ஆங்கிலத்திலோ, தமிழிலோ ஒரு கடிதம் கூட எழுதவராது என்றாலும் படிக்குற எல்லாரும் டாக்டர் ஆயிடனும். அப்புறம் யார்தான் பேஷண்ட்??? எல்லாரும் பல்லக்கு ஏறிட்டா பல்லக்கை யார்தான் தூக்குறதாம்??? குழந்தைகளை படுத்துவது நீட் அல்ல பெற்றோர்கள்தான்.” இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.
நீட் தேர்வால் தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், கிஷோர் கே சுவாமியின் இந்த பதிவுக்கு பலரும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர். இதுமட்டுமின்றி தமிழகத்தில் இருந்து இந்திய அணி கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் நடராஜனை சாதிப்பெயர் குறிப்பிட்டு டுவிட்டரில் பதிவிட்டும் கடுமையான கண்டனங்களுக்கு ஆளாகினார். இதுமட்டுமின்றி, பேரறிவாளன் விடுதலைக்காக போராடி வரும் அற்புதம்மாள் பற்றியும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றியும் மிகவும் அவதூறாக பதிவிட்டுள்ளார். கிஷோர் கே சுவாமி தீவிர தீவிர வலதுசாரி ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு கிஷோர் கே சுவாமி குடித்துவிட்டு தெருவில் ஆடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.