சமூக வலைத்தளம் மற்றும் யூடியூபில் தொடர்ந்து ஆபாசமாக பேசிய புகாரில், மதுரையில் பதுங்கி இருந்த சூர்யா, சிக்கந்தர் இருவரையும் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் இதுவரை ரவுடி பேபி சூர்யா மீது பல வழக்குகள் பதிவாகி இருந்தது. தொடர்ந்து இது போன்று ஆபாசமாகபேசி யூ ட்யூப் சேனலில் அவர் பதிவு செய்து வருவதால், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேபோல், சூர்யா மற்றும் சிக்கந்தரின் யூடியூப் சேனலையும் முடக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முன்னதாக, கோவை மாவட்டம் பெரிய நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் திலகா. திலகா மற்றும் அவரது கணவர் முத்து ஆகியோர் யூடியூபில் விழிப்புணர்வு மற்றும் சினிமா அப்டேட் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் யூடியூபரான ரவுடி பேபி சூர்யாவிற்கும், திலகாவிற்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது. சுப்பு லட்சுமி என்கிற ரவுடி பேபி சூர்யா நடத்தி வரும் சூர்யா மீடியா மற்றும் சிக்கந்தர்ஷா என்கிற சிக்கா நடத்தி வரும் சிங்கர் சிக்கா அபிசியல் என்ற யூடியூப் சேனல்களில் திலகாவை பற்றி மிகவும் இழிவாகவும், ஆபாசமாகவும் உருவ கேலி செய்தும் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.
மேலும் தொடர்ந்து சமூக இணையதளத்தில் ஆபாசமாகவும், இழிவாகவும் பார்ப்பவர்களை முகம் சுழிக்கும் வகையிலும், தனது 10 வயது மகளை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டு வரும் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில், பாலியல் ரீதியாக பேசுதல், பெண்களை இழிவாக பேசுதல், தகவல் தொழில் நுட்ப சட்டம், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இது குறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூக வலைதளங்களில் சமூகத்தையும், இளைஞர்களையும் சீரழிக்கும் தவறான விஷயங்களை சூர்யாவும், சிக்கந்தர்ஷாவும் பதிவு செய்து வருகின்றனர். சமூகத்தில் இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லக் கூடும் என்பதால் இவர்களின் யூடியூப் சேனலை முடக்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் சமூகநலன்களையும், இளைஞர்களையும் சீர்கெடுக்கும் தவறான கருத்துக்களையும் வீடியோக்களையும் பதிவு செய்வோரின் சேனல்கள் முடக்கப்பட்டு அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்