நெல்லை பாளையங்கோட்டை அருகே கே.டி.சி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது29). இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 3ம் தேதி பார்த்தசாரதி வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் உடன்குடி செட்டியாபத்தில் உள்ள கோவிலுக்கு சென்றார். இந்நிலையில் நேற்று அவரது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் பார்த்தசாரதிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் நேற்றிரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த நகைகள் திருடு போயிருந்தது தெரிய வந்தது. உடனடியாக அவர் இது குறித்து பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆய்வாளர் நாஞ்சில் பிரித்விராஜ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அதே பகுதியில் உள்ள மீனாட்சி சுந்தரம் நகரில் வசிக்கும் கோகுல்நாத்(31) என்பவரது வீட்டிலும் 2 சவரன் தங்கநகை திருடு போயிருப்பது தெரியவந்தது. கோகுல்நாத் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இவரும் சந்திப்பு உடையார்பட்டியில் உள்ள தனது மனைவி வீட்டுக்கு குடும்பத்துடன் சென்ற நிலையில் நேற்றிரவில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு நகை திருடு போயிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த இரண்டு புகாரின் பேரில் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். குறிப்பாக ஒரே நேரத்தில் இரண்டு வீட்டிலும் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்தனர். அதன்படி அப்பகுதியில் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது சிசிடிவி கேமராவில் டிப்டாப்பாக உடை அணிந்த இளைஞர் ஒருவர் கையில் இரும்பு கம்பி போன்ற ஆயுதத்துடன் அங்கும் இங்குமாக நடந்து சென்றது பதிவாகியிருந்தது. இதனை கைப்பற்றிய போலீசார் அந்த காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கே டி சி நகர் அருகே இரண்டு வீடுகளில் தங்க நகைகள் கொள்ளை போயிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.