Crime: கோவாவில் இளம் பெண்ணை கொடூரமாக கொலை செய்த குற்றத்திற்காக 22 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.


தொடரும் கொடூரங்கள்: 


பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது. ஷ்ரத்தா கொலை வழக்கு நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் இருக்கிறோம் என்பதை வெளிச்சம்போட்டு காட்டியது. ஷர்த்தா கொலை வழக்கின் அதிர்ச்சி அடங்குவதற்குள்ளேயே உத்தரப் பிரதேசத்திலும் மேற்குவங்கத்திலும் அதே போன்ற கொலை கொடூரம் சம்பவங்கள் அரங்கேறின. அதன் தொடர்ச்சியாக,  தற்போது கோவாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது,  தன்னை விட்டு சென்ற ஆத்திரத்தில் பெண்ணை, அவரது காதலனே கொடூரமாக கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


காதலியை கொன்ற காதலன்: 


கோவாவில் 22 வயதான இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக உறவில் இருந்துள்ளனர். இந்நிலையில், சில மாதங்களாக  இரண்டு பேருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.  இதனால் அந்த பெண் அவருடன் பேசுவைதை நிறுத்தினார். அடிக்கடி சண்டை ஏற்படுவதால், அந்த பெண்ணும் அவரை பிரேக்கப் செய்து பிரிந்து சென்றுள்ளார். அந்த இளைஞரின் நம்பரையும் பிளாக் செய்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில், சம்பவத்தன்று அந்த பெண்ணை சந்திக்க அழைத்துள்ளார். அந்த பெண்ணும் அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, தன்னை காதலிக்க  வேண்டும் என மீண்டும் சண்டையிட்டுள்ளார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் நீடித்த நிலையில், அந்த பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளதாக தெரிகிறது. 


கொலை செய்துவிட்டு, பெண்ணின் உடலை காரில் எடுத்துக் கொண்டு, கோவாவில் இருந்து 80 கி.மீ தூரத்தில் இருக்கும் மகாராஷ்டிராவில் அம்போலி காட்  என்ற பகுதியில் உள்ள காட்டில் வீசிச் சென்றுள்ளார்.  இதனை அடுத்து, அக்கம் பக்கத்தினர் சாக்கு மூட்டையில் உடல் இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 


பிரேக்-அப் செய்ததால் ஆத்திரம்:


பின்னர், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ளனர். பெண்ணை கொலை செய்தது 22 வயதான கோவாவின் போர்வோரி பகுதியைச் சேர்ந்த ஃபகீர் என்று அடையாளம் கண்டனர். கொலைக்கு  உடந்தையாக இருந்த அவரது நண்பர் பிரகாஷ் சுஞ்சவாட் என்றும் தெரிந்தது. மேலும், கொலை செய்யப்பட்ட பெண் காமாக்ஷி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. பின்னர், பெண்ணை கொலை செய்த குற்றத்திற்காக ஃபகீர் மற்றும் அவரது நண்பர் பிரகாஷை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பிரேக்கப் செய்த ஆத்திரத்தில் இளம்பெண்ணை அவரது காதலன் கத்தியால் குத்திக் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.